“அரசுப்பள்ளி என்பது வறுமையின் அடையாளமா?;அதனை பெருமையின் அடையாளம் என மாற்றுவோம்”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..!
அரசுப்பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல,அதனை பெருமையின் அடையாளம் என மாற்றுவோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அப்போது தமிழக அரசின் மாநில பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து, மறுநாள் 14ம் தேதி முதன் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,மூன்று நாட்களாக மாநில பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்று வருகிறது.அதன்படி,பாமக சட்டமன்ற தலைவர் ஜி.கே.மணி பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
அப்போது பேசிய அவர்,”ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்று தெரிவித்திருக்கிறீர்கள். அதில் ஒவ்வொரு நதியிலும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். நீர் மேலாண்மைக்கு நீரியல் வல்லுநர்களை கொண்ட குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளன. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் வகையில் கல்வியில் சீர் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.குறிப்பாக, கூடுதல் கல்வி நிலையங்கள் அமைக்க வேண்டும்”, எனக் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்,”தற்போது வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையானது 6 மாதத்திற்கானதுதான்.அடுத்த நிதிநிலை அறிக்கைகளில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அடுத்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல்,அரசு ஊழியர்களின் அகவிலைப்படிக்காக ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் நிது ஒதுக்கப்படுகிறது.இன்னும் இரண்டு ஆண்டுகளில் துறைக்கு தேவையான அனைத்து நிதிகளையும் ஒதுக்குவதாக நிதி அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார்
அரசுப் பள்ளிகளை நவீன பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.எனவே,அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல,அதனை பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்”,என்று தெரிவித்தார்.