திருச்சியில் பயங்கரம் ! வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கிய பெண் வெட்டிக்கொலை தடுக்க முயன்ற கணவருக்கு அருவாள் வெட்டு ..!!

Default Image

திருச்சி மாவட்டம் சிறுகனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பெரகம்பி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அன்பழகன்(வயது 65). விவசாயி. இவருக்கு ரமேஷ் (35), ராஜ்குமார்(28) என 2 மகன்கள் உள்ளனர்.

இதில் ரமேசுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு லதா என்பவருடன் திருமணமானது. ரமேஷ் அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் தனியாக வீடு கட்டி, மனைவியுடன் குடியிருந்தார். ராஜ்குமாருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. அவர் மனைவி மற்றும் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரமேசும், லதாவும் சாப்பிட்டு விட்டு வீட்டின் வெளியே கயிற்று கட்டில்களில் தனித்தனியே படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் லதாவை வெட்டினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு கண் விழித்த ரமேஷ், நடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து மனைவியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மர்ம நபர்கள் வெட்டினர். இதில் ரமேசுக்கு தலை மற்றும் நெற்றி, தோள் பகுதி ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் கீழே மயங்கி விழுந்தார். மர்ம நபர்கள் வெட்டியதில் லதா பரிதாபமாக இறந்தார்.

நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் லதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதையும், ரமேஷ் உயிருக்கு போராடி கொண்டிருப்பதையும் பார்த்து, சிறுகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஞானவேலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிருக்கு போராடி கொண்டிருந்த ரமேசை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். லதாவின் உடலை போலீசார் கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதா லெட்சுமி, லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் ஸ்பார்க் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி ரமேசின் வீட்டில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கொலை செய்யப்பட்ட லதாவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி, தோடு, மெட்டி உள்ளிட்ட நகைகள் கொள்ளை போகவில்லை. மேலும் வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்ட நிலையில் கிடந்தது. வீட்டின் முன்புறம் நிறுத்தியிருந்த புதிதாக வாங்கப்பட்ட மோட்டார் சைக்கிளை மட்டும் கொலையாளிகள் எடுத்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மேலும் வீட்டில் நகைகள் ஏதும் கொள்ளையடிக்கப் பட்டதா? என்பதும் தெரியவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரமேஷ் பேசினால் தான், இந்த கொலைக்கான காரணமும், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றியும் தெரியவரும், என்றனர். மேலும் இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தை கேள்விப்பட்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்