3 ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் – மதுரை ஐகோர்ட்!
3 ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என மதுரை ஐகோர்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி அறிவித்திருந்த நிலையில், 2018ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு வெளியாகியது. அதன்படி மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தோடு அறிவிக்கப்பட்ட பிற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் அனைத்தும் துவங்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகத்தில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த கட்டுமான பணிகளை விரைவில் துவங்க வேண்டும் எனவும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் தான் அமைய உள்ளது என மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும் எனவும் மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது இது தொடர்பான உத்தரவை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் வெளியிட்டுள்ளனர். அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் இன்னும் ஆறு மாதங்களில் முழுமையாக நிறைவடையும் என நம்புவதாகவும், நீதிமன்ற உத்தரவை எதிர்பார்க்காமல் கட்டுமான பணிகளை மத்திய அரசு விரைவாக முடித்து கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.