புழல் சிறையில் கைதியிடம் லஞ்சம் கேட்ட ஜெயிலர் ஜெயராமன் மீது  நடவடிக்கை எடுக்க தயக்கம்!

Default Image

புழல் மத்திய சிறை ஜெயிலர் ஜெயராமன் மீது கைதியிடம் லஞ்சம் கேட்ட புகாரில் சிக்கிய நிலையில், துறை ரீதியாக, குறைந்தபட்ச நடவடிக்கை கூட எடுக்கப்படாமல், மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்துள்ள புழல் மத்திய சிறையின், விசாரணை கைதிகளுக்கான பிரிவின் ஜெயிலராக இருந்தவர் ஜெயராமன். விசாரணை கைதிகளுக்கு சின்ன சின்ன சலுகைகள் வழங்குவதில் தொடங்கி, அவர்களுக்கு செல்போன் சப்ளை, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் சப்ளை என்பதோடு, கேண்டீனில் தாங்கள் விரும்பும் உணவுகளை கைதிகள் உண்ண ஏற்பாடு செய்வது உள்ளிட்டவற்றை, கமிஷன் பெற்றுக்கொண்டு, சட்டவிரோதமாக அனுமதித்ததாக ஜெயிலர் ஜெயராமன் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. மகாநதி படத்தில் வரும், மகாநதி சங்கர் என்ற கதாபாத்திரத்தை நினைவூட்டுவது போன்று, தாதாக்கள் உள்ளிட்ட விசாரணை கைதிகளுக்கு ஜெயிலர் ஜெயராமன் சலுகை காட்டி வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தான், தனது விசுவாசியின் மூலம் கையூட்டு பெற்றபோது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ஜெயிலர் ஜெயராமன் சிக்கியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரியைச் சேர்ந்த மாஹீன் அபுபக்கர் என்பவர் போதைப்பொருள் வழக்கு ஒன்றில், புழல் சிறையில் விசாரணை கைதியாக உள்ளார். இவரை திடீரென ஒருநாள் சந்தித்த ஜெயிலர் ஜெயராமன்,மாஹீன் அபுபக்கரை, பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி சிறைக்கு மாற்ற இருப்பதாகவும், அங்கு மாற்றப்படாமல் இருக்க, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருமாறும் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தன்னை பார்க்க வந்த உறவினர்களிடம், ஜெயிலர் ஜெயராமன் லஞ்சம் கேட்பதாக மாஹீன் அபுபக்கர் கூறியுள்ளார்.

அவரது உறவினர்கள் மூலம், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு இந்த புகார் சென்றது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆலோசனைபடி, மாஹீன் அபுபக்கரின் உறவினர்கள், பணம் தர முன்வந்தபோது, ஜெயில் வார்டன் பிச்சையா என்பவரிடம், அந்த லஞ்ச பணத்தை தருமாறு, ஜெயிலர் ஜெயராமன் கூறியிருக்கிறார். இதையடுத்து, ஜெயில் வார்டன் பிச்சையாவை அபுபக்கரின் உறவினர்கள் சந்திக்க, அவரோ, தனக்கும் 20 ஆயிரம் ரூபாய் கமிஷன் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

இதையடுத்து, 40 ஆயிரம் ரூபாய் ரசாயணம் தடவிய பணத்தை, கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி புழல் சிறை அருகே உள்ள இடத்தில் வைத்து பிச்சையா வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்னர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஜெயிலர் ஜெயராமன், தன்னிடம் பணத்தை வாங்குமாறு கூறியதாக ஒப்புக்கொண்டார். இதன் அடிப்படையில், ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ், ஜெயில் வார்டன் பிச்சையா மீதும், ஜெயிலர் ஜெயராமன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால், லஞ்சம் வாங்கியதாக உறுதி செய்யப்பட்டு, வழக்குப்பதிவான பின்னரும், ஜெயிலர் ஜெயராமன் மீது எவ்விதமான துறைரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் மூத்த அமைச்சர் ஒருவருடைய நெருங்கிய உறவினர், ஜெயிலர் ஜெயராமன் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, அல் உம்மா அமைப்பு உள்ளிட்ட விசாரணை கைதியாக உள்ளவர்களுக்கு ஜெயிலர் ஜெயராமன் செல்போன் சப்ளை உள்ளிட்ட சலுகை காட்டுவதாக, அப்போதைய லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் மஞ்சுநாதா, சிறைத்துறைக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதில், தீவிரவாதிகளுக்கு செல்போன் சப்ளை செய்ததில் சிறைத்துறையின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு தொடர்பு இருப்பதால், ஜெயிலர் ஜெயராமன் உள்ளிட்ட அனைத்து சிறை அதிகாரிகளையும் மாற்ற வேண்டும் என்றும், இல்லை என்றால் பெரும் ஆபத்து ஏற்படும் என்றும் மஞ்சுநாதா கேட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால், இந்த கடிதத்தை கையில் வைத்திருந்த ஜெயிலர் ஜெயராமன், தன்னிடம், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரையே மாற்றும் அதிகாரம் இருப்பதாக கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு பின்னர், மஞ்சு நாதா லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டிருக்கிறார்.

லஞ்ச புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டும், ஜெயிலர் ஜெயராமன் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்காமல், வழக்கமாக பணியிட மாற்றம்போல், மதுரை மத்திய சிறைக்கு மாற்றியிருப்பதாகவும், அந்த சிறையிலும், புழல் சிறையில் நடந்தது போன்ற முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பிருப்பதால், அதற்கு முன், சிறைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்திருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்