“100 நாள் வேலைத்திட்டத்தை உயர்த்தி,வேளாண்மையை யாரைக்கொண்டு செய்வீர்கள்?” – சீமான் கேள்வி..!
100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்தி,வேளாண்மையை யாரைக்கொண்டு செய்வீர்கள்? என்று தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் முதல் முறையாக நேற்று சட்டசபையில் வேளாண் துறைக்கென பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேவையில் தாக்கல் செய்தார்.அதில்,பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன.
இந்நிலையில்,இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில்,”நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை அடியொற்றியது போலத் தயாரிக்கப்பட்ட வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள இயற்கை சார்ந்த முன்னெடுப்புகளையும், வேளாண்மை சார்ந்த திட்டங்களையும் வெறுமனே வெளித்தோற்ற அரசியலுக்காகப் பயன்படுத்தாது உளப்பூர்வமாகச் செயலாக்கத்திற்குக் கொண்டுவர உழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
கோரிக்கை முழக்கம் உயிரூட்டம்:
“தமிழகத்தில் முதன்முறையாக வேளாண்துறைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கை தவெளியிட்டிருப்பதை உளப்பூர்வமாக ஏற்று வரவேற்கிறேன். வேளாண்மைக்கு முன்னுரிமை தர வேண்டுமென்பதை வலியுறுத்தி, அதற்கெனத் தனி நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கருத்தாக்கத்தை நாம் தமிழர் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் பல ஆண்டுகளாக முன்வைத்து வந்த நிலையில், தற்போது அக்கோரிக்கை முழக்கம் உயிரூட்டம் பெற்றிருப்பது அறிந்து பெரிதும் மகிழ்ந்தேன்.
நல்லதொரு முன்நகர்வு:
திமுக அரசால் வெளியிடப்பட்டிருக்கும் வேளாண்மை நிதிநிலை அறிக்கையிலுள்ள பெரும்பாலான திட்டங்களும், இலக்குகளும், தமிழ்நாட்டின் எதிர்கால நலன்களைத் தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து நாம் தமிழர் கட்சி முன்வைத்த ஆட்சியின் செயற்பாட்டு வரைவில் இருக்கும் திட்டங்களை முழுமையாக அடியொற்றி இருப்பது நல்லதொரு முன்நகர்வாகும்.
வேளாண்மையை தேசியத்தொழிலாக்குவோம்:
‘வேளாண்மையை தேசியத்தொழிலாக்குவோம்; ஆடு, மாடு, வளர்த்தலை அரசுப்பணியாக்குவோம் என நாங்கள் முன்வைத்த தற்சார்புப் பொருளாதாரக் கட்டமைப்பை நோக்கமாகக் கொண்ட தொலைநோக்குப் பார்வையுடனான பசுமைத்திட்டங்களைச் சாத்தியமற்றது எனக் கூறி, காழ்ப்புணர்ச்சி கொண்டு கேலிசெய்து ரசித்தவர்களும், வன்மம் கொண்டு ஏளனத்தோடு எள்ளி நகையாடியவர்களும், தற்போது அதே திட்டங்களை வேறு பெயரில் திமுக அரசு முன்வைக்கும்போது வரவேற்கும் விந்தை நகைப்பைத்தான் தருகிறது.
திமுக தேர்தல் அறிக்கை:
ஆடு, மாடு, வளர்ப்புக்கு மானியம் தருவோம் என அறிவித்ததோடு, பட்டுப்பூச்சி வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பானை செய்தல், பாய் பின்னுதல் போன்றவற்றைச் செயல்படுத்த முனைவோம் என நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவில் உள்ள சில திட்டங்களைத் தனது தேர்தல் அறிக்கையில் எடுத்து வெளியிட்ட திமுக,தற்போதைய வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் பெரும்பாலானவற்றை எடுத்தாண்டு அறிவித்திருப்பதில் பெரிய வியப்பில்லை.
தற்சார்புப் பசுமைப் பொருளாதாரக் கொள்கை:
தமிழகம் முழுவதும் விளைச்சல் நிலங்களைத் தெரிவு செய்து, அந்நிலங்களில் மண்ணின் தன்மைக்கேற்றவற்றைப் பயிரிட்டு, வேளாண்மைசெய்வது; அவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதற்கு நிலமும், வளமும் சார்ந்த தொழிற்சாலைகளை அந்நிலப்பகுதிக்கு அருகிலேயே அமைப்பது; உற்பத்தியானவற்றை நிறுவனப்படுத்தி உள்நாட்டுக்கு, வெளிநாட்டுக்குச் சந்தைப்படுத்துவது; மேய்ச்சல் நிலங்களைத் தெரிவு செய்து, ஆடு, மாடு வளர்ப்பை நவீனப்படுத்துவது; அவற்றின் இறைச்சி, பால், போன்றவற்றைச் சந்தைப்படுத்துவது; அவற்றை மூலப்பொருட்களாகக் கொண்ட தொழிற்சாலைகளை நிறுவி, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து, நிறுவனப்படுத்தி ஏற்றுமதி செய்வது;
பொருளாதார மேதை ஐயா, ஜே.சி.குமரப்பா வழியில்:
இயற்கை உரங்களை உற்பத்தி செய்வது, ஏற்றுமதி செய்வது; அவற்றைப் பயன்படுத்தி நஞ்சற்ற உணவு, தானியங்களை விளைவிப்பது; மட்பாண்டம் செய்தல், கூடை முடைதல், கட்டில் பின்னுதல், என கிராமங்கள் சார்ந்த சிறுதொழில்கள் யாவற்றையும் நிறுவனப்படுத்தி, அந்தந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் சீரான, சமமானப் பொருளாதார வளர்ச்சியை எட்டுவது; என இப்படிப் பல்வேறு வழிகளில் சிற்றூர்கள் சார்ந்த பொருளாதாரங்களைப் பெருக்கிக் கட்டமைப்பதன் மூலம் நகரமயமாதலை மட்டுப்படுத்தி, வறண்டு வெறுமையாகி வரும் கிராமங்களுக்குப் புத்துயிரோட்டம் அளிக்கும் விதமான திறன்மிகுத் திட்டங்களை நாம் முன்வைத்தோம். நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த இந்தத் தற்சார்புப் பசுமைப் பொருளாதாரக் கொள்கையைக் காந்தியப் பொருளாதார மேதை ஐயா, ஜே.சி.குமரப்பா வழியில் செயல்படுத்த விழைந்தோம்.
வேளாண்மையை யாரைக்கொண்டு செய்வீர்கள்?:
நாம் வகுத்த திட்டங்கள் யாவும் பரவலாக இன்று எல்லோரது கவனங்களைப் பெற்றிருப்பதும், அவசியம் உணர்ந்து, அவற்றைத் தவிர்க்க இயலாது ஆட்சியாளர்கள் செயல்படுத்த முன்வருவதும் நாம் தமிழர் கட்சியின் அரசியலுக்குக் கிடைத்திட்ட நேர்மறையான அங்கீகாரமென்றே கருதுகிறேன்.
அதேநேரம், மனித ஆற்றலை மூலதனமாகக் கொண்டு, உற்பத்தியைப் பெருக்கியளித்து, மக்களின் தேவைகளை நிறைவு செய்து, வருமானத்தை ஈட்டுவதுதானே சரியான பொருளாதாரக் கொள்கையாக இருக்க முடியும்? அக்கொள்கைக்கு எதிராக மனித ஆற்றல்களை மழுங்கடிக்கும், வேளாண்மைத் தொழிலாளிகளை அத்தொழிலிருந்து வெளியேற்றிக்கொண்டிருக்கும்,100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த வலியுறுத்துவோம் என ஒருபக்கம் சொல்லிவிட்டுப் பிறகு வேளாண்மையை யாரைக்கொண்டு செய்வீர்கள்? வெறும் கருவிகளை மட்டும் நம்பி வேளாண்மை செய்ய முடியுமா? என்ற தன்முரண் மிகுந்த கேள்வியும் நமக்கு எழுகிறது.
அரசியல் தாக்கத்தின் அபரிமிதமான பிரதிபலிப்பு:
இந்நிலையில் இயற்கை வேளாண்மை, பனைக்கு முன்னுரிமை, பனை சார்ந்த தொழில்கள் உருவாக்கம், பனையை வெட்டத் தடை, பாரம்பரியப் பயிர் ரகங்கள் மீட்பு, பெருந்தகப்பன் நம்மாழ்வார் பெயரில் ஆராய்ச்சி மையம், மண்ணின் வளங்களுக்கும், பொருட்களுக்கும் புவிசார்க் குறியீடு, மண்ணுக்கேற்ற வேளாண்மை, அவற்றைச் சந்தைப்படுத்த கிடங்குகள், என நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை நகலெடுத்தது போல திமுக அரசின் வேளாண்மை நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பது என்பது நாங்கள் முன்வைத்த அரசியல் தாக்கத்தின் அபரிமிதமான பிரதிபலிப்பேயாகும்.
விடைதெரியாது தொக்கி நிற்கிறது:
ஒட்டுமொத்தமாக, ஒன்பது துறைகளை உள்ளடக்கிய வேளாண்மைத்துறைக்கான நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பீடு 34,220 கோடி ரூபாயாக இருப்பது மிகக்குறைவானதுதான் எனும்போது நிதிநிலை அறிக்கையிலுள்ள திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு இந்த நிதி போதுமானதா? எனும் கேள்வி விடைதெரியாது தொக்கி நிற்கிறது.
திமுக அரசின் புரிதல்:
எனினும், இயற்கை சார்ந்த பணிகளுக்கும், வேளாண்மை சார்ந்த திட்டங்களுக்கும் திமுக அரசு முதன்மைத்துவம் வழங்கி யிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், மதிப்புமிகு நன்றிகளையும் தெரிவிக்கிறேன். எப்படியோ, இயற்கையைப் பேணுவதும், வேளாண்மையை வளர்த்தெடுத்துச் செழிக்கச் செய்வதும்தான் இனி வருங்காலம் என்ற நிலைப்பாட்டுக்கு இப்போதாவது வந்திருக்கின்ற திமுக அரசின் புரிதலை வரவேற்கிறேன்.
இத்தோடு, வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்ட வேளாண்மைத் திட்டங்களையும், இயற்கை சார்ந்த முன்னெடுப்புகளையும் வெறுமனே வெளித்தோற்ற அரசியலுக்காகப் பயன்படுத்தாது அதனை உளப்பூர்வமாகச் செயலாக்கம் செய்திட உழைக்க முன்வர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்துகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
“100 நாள் வேலைத்திட்டத்தை உயர்த்தி,வேளாண்மையை யாரைக்கொண்டு செய்வீர்கள்?” – நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி..! pic.twitter.com/uVlVS2pKDy
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) August 15, 2021