திமுக சொன்னது ஒன்று, செய்திருப்பது வேறு.. இதையெல்லாம் சாதனையாக கருத முடியாது – டிடிவி தினகரன்

Default Image

தமிழக அரசின் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தி.மு.க சொன்னது ஒன்று, செய்திருப்பது வேறு என டிடிவி தினகரன் விமர்சனம்.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என்றவுடன் தமிழகத்தில் விவசாயத்தையும், விவசாயிகளையும் உயர்த்தும் அளவுக்கு தொலைநோக்கு பார்வை கொண்ட மிகப்பெரிய செயல்திட்டத்தை தமிழக அரசு வெளியிடும் என்று அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்ட எதிர்பார்ப்பு பொய்யாகி இருக்கிறது. ஏனெனில், வழக்கமான நிதிநிலை அறிக்கையில் இருந்து சில அம்சங்களைப் பிரித்தெடுத்து பெயரளவுக்கு ஓர் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.2,500 ஆக உயர்த்துவோம் என்று வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தவர்கள், வெறும் ரூ.25 மட்டும் அதிகப்படுத்தி, ரூ.2,015 மட்டும் வழங்கி தமிழக விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறார்கள். இதுமட்டுமின்றி, விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகளை தாமதமின்றி கொள்முதல் செய்வதற்கான வழிமுறைகளை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தால், நெல்மூட்டைகளை மூடி வைக்க தார்பாய் வாங்குவோம் என்று ஜெட்டில் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுதான் பிரச்னைக்கு தீர்வு காணும் வழியா?. டன்னுக்கு ரூ.4,000 ஆக உயர்த்தி தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த திமுக, தற்போது பெயரளவுக்கு ரூ.150 ஊக்கத்தொகை அறிவித்து, ரூ.2,900 மட்டும் வழங்குவது போதுமானதல்ல. 100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை விவசாயத்திற்கும் பயன்படுத்தும் வகையில், செயல்திட்டம் வகுக்க வேண்டும் என்ற வேளாண் பெருமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை.

இது போன்றே சிறு, குறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நேரடியாக பலன் தரும் அறிவிப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. தமிழக அரசின் இயற்கை விவசாயம் சார்ந்த முன்னெடுப்புகள் ஆறுதல் அளித்தாலும் அதற்கான செயல்பாடுகள் எப்படி இருக்கப் போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மொத்தத்தில் வேளாண்மைத்துறைக்கு தனியாக பட்ஜெட் போட்டதையே சாதனையாக கருத முடியாது. அதன்மூலம் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பலன் கிடைக்க வேண்டியதே முக்கியம் என்பதை ஆட்சியாளர்கள் மனதில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்