#BREAKING: ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்- முதல்வர் அறிவிப்பு..!

Default Image

ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை அரசு விழாவாக கொண்டாடப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். முதலாம் இராஜேந்திர சோழனின் கட்டடக்கலைகளின் காலம் அழகிய முதல் சோழர்களின் கலை மற்றும் தொகுப்பாகவும், வாழும் வரலாறாகவும் விளங்குகிறது. அண்மையில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ (UNESCO) உலகப் புராதன பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பினைக் கண்டுகளித்திட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதிவாழ் மக்களால் வெகு விமர்சையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாவட்ட அளவில் கொண்டாடப்படுகிற இவ்விழாவினை அரசு விழாவாகக் கொண்டாட அப்பகுதிவாழ் மக்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் சார்பில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இக்கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிட்டுள்ளார்.

தற்பொழுது நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக, வரும் ஆண்டு முதல் இந்த விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

LIVE NEWS TAMIL
Geethajeevan
Yogi Babu
Southwest Bay of Bengal
M K Stalin
chicken pox (1)
orange alert tn