#LIVE: தமிழக அரசின் தற்போதைய கடன் 5,70,189 கோடி..!
தமிழக அரசின் தற்போதைய கடன் 5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின் நடைப்பெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், ஆளுநர் உரையின் போது நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.
20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2001-ல் அதிமுக ஆட்சியில் பட்ஜெட் தாக்கலின்போது பொன்னையன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். வெள்ளை அறிக்கையை வெளியிட்ட பின்னர் நிதியமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில்,
- முதல்வர் முக ஸ்டாலின் காட்டிய பாதையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வெள்ளை அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை தயாரித்தோம்.
- இணையதளத்திலும் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
- இதற்கு முன்னால் 2001 இல் அதிமுக வெளியிட்ட அறிக்கையில் வெளியிட்ட பொன்னையன் பெயர் இல்லை. ஆனால் இதில் என்னுடைய பெயர் இருக்கிறது. அதற்கு காரணம் இதில் தவறு ஏதும் இருந்தால் அதற்கு முழு பொறுப்பு நான் என தெரிவித்தார்.
- திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2 மாதங்கள் கொரோனா 2வது அலை தடுப்பு பணியில் போய் விட்டது.
- கடந்த 10 ஆண்டுகளில் வருமானம் மிகவும் சரிந்துள்ளது.
- 2020-21ம் நிதி ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாகுறை 61 ஆயிரத்து 320 கோடியாக உள்ளது.
- இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வருவாய் பற்றாக்குறை இவ்வளவு சரிவு ஏற்பட்டது இல்லை.
- வருமானம் சரிந்துள்ளதை ரிசர்வ் வங்கி, நிதிக்குழு உள்ளிட்ட அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
- தமிழகத்தில் ஒரு குடும்பத்தின் மீதான கடன் சுமை 2,63,976 ரூபாயாக உள்ளது.
- 2011-16 இல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 17 கோடி; 2016 -21 அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 1.50 லட்சம் கோடி.
- அந்தத் தருணத்தில் வாங்கிய 3 லட்சம் கோடி ரூபாய் கடனில் 50 சதவீதம் இந்தப் பற்றாக்குறையை சமாளிக்கச் செலவிடப்பட்டது.
- இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை.
- அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம், அரசாங்க அலுவலகங்களை நிர்வகிப்பது, மின் கட்டணம் கட்டுவது ஆகியவற்றுக்கே கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்.
- தமிழக அரசின் தற்போதைய கடன் 5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது.
- தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை 5.24 லட்சம் கோடியாக உள்ளது.
- தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் , வட்டி அதிகரித்து விட்டது.
- கடந்த 5 ஆண்டுகளில் ரூ.39,079 கோடி மறைமுக கடனாக எடுக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தின் பொது துறை நிறுவனங்களான Tangedco 90% மற்றும் போக்குவரத்து கழகங்கள் 5% கடன் பெற அதிமுக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
- முந்தைய திமுக ஆட்சியில் 13.89 சதவீதமாக இருந்த வருமானம். அதிமுக ஆட்சியின் இறுதியில் 4.65 சதவீதமாக சரிவு.
- நான்கு வழிகளில் மாநில அரசுக்கு வருமானம் வருகிறது. மாநில வரி, வரியில்லா வருவாய், மத்திய அரசின் வரிபங்கீடு, திட்ட மானியம் ஆகியவையே வருமானத்திற்கான வழிகள்.
- 2008 – 09-ம் ஆண்டில் 13.35 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2020 – 21-ல் 8.7 சதவீதமாக குறைந்துள்ளது.
- கடந்த 10 ஆண்டுகளில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4 சதவீதமாக சரிவு.
- வருமானவரி, GST, பெட்ரொல் வரி என நேரடி வரியை மத்திய அரசு தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
- ZERO TAX என்பது சரியானது இல்லை. சரியான வரியை, சரியாக வசூலிப்பதுதான் சிறப்பாக இருக்கும்.
- கடந்த ஆட்சியில் சரியான நேரத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் 2577 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு இழந்துள்ளது.
- கடந்த திமுக ஆட்சியில் உற்பத்தி வளர்ச்சி அதிகரித்தது; அதைவிட அதிகமாக வரி வருவாய் வளர்ச்சியும் இருந்தது.
- மதுபானம் வருவாய் கலால் வாரியாக எடுக்காமல் வாட் வாரியாக எடுக்கப்பட்டதால் பெரிய அளவில் வருவாய் சரிவு.
- தமிழகத்தில் கடந்த 15 வருடங்களாக மோட்டார் வாகன வரி உயர்த்தப்படவில்லை.
- பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை. வரியை உயர்த்தாததால் பணக்காரர்களுக்கு பலன்.
- தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.20,033 கோடியுள்ளது.
- அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மானியங்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேர்ந்ததா என்பது குறித்து விவரங்கள் இல்லை.
- அதிமுக ஆட்சியில் சொத்து வரியை முறையாக வசூலிக்கப்படவில்லை, உயர்த்தப்படவும் இல்லை.
- தமிழ்நாடு அரசு ஒரு நாள் வட்டியாக 87.31 கோடி ரூபாயை செலுத்துகிறது.
- உள்ளாட்சி அமைப்புகள் மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்கள் 1,743 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளனர்.
- மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் மின்துறைக்கு தர வேண்டிய தொகை ரூ.1200 கோடி.
- போக்குவரத்துத்துறை மின்சாரத்துறை, மின்சார பகிர்மான கழகத்தால் மட்டும் அரசாங்கத்தில் 2 லட்சம் கோடி கடன்.
- அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகள் 1கி.மீ ஓடினால் ரூ.59.57 நஷ்டம் ஏற்படுகிறது.
- ஒரு லிட்டர் பெட்ரோல் டீசல் மீதான வரி ரூபாய் 12 லிருந்து 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீதான வரி விதிக்கப்படும் ரூ.32-ல் , ரூ.31.50 மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. 50 பைசா மட்டுமே அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்துக் கொடுக்கிறது.
- மின்சாரத்துறையில் ஒரு யூனிட் வாங்கினால் ரூ.2.36 இழப்பு. மின்சாரத்துறையில் மட்டும் அரசுக்கு 1.34 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது.
- நிதிநிலைமை எப்போது சரியாகும் என்பதை தேதி கூற முடியாது. 5 வருடத்தில் சரி செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தல் வாக்குறுதியை திசைத்திருப்ப இந்த அறிக்கை இல்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
- தமிழகத்தில் 1.83 லட்சம் பெண்கள், 1.88 லட்சம் ஆண்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் திறன் பயிற்சி தரப்பட்டு உள்ளது.
- அதிமுக ஆட்சியாளர்களுக்கு அரசியல் உறுதியும், நிர்வாகத் திறமையும் இல்லை. கடந்த 7 ஆண்டுகளில் சரியாக ஆட்சி நடத்தாததே தற்போதைய பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணம்.
- அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள அனைத்தையும் சரி செய்யக் கூடியதே; கடந்த 7 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகள் 5 ஆண்டுகளில் சரி செய்யப்படும்.
- அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தின் ஒப்புதலின்றி ஒரு லட்சம் கோடி வீண் செலவிடப்பட்டுள்ளது. அதிமுக அரசின் வீண் செலவால் தனிநபர் ஒருவருக்கு ரூ.50000 இழப்பு.