கைது செய்யப்பட்டுள்ள ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு…!
கைது செய்யப்பட்டுள்ள ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது மேலும் ஒரு மோசடி தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் தான் எம்.ஆர்.கணேஷ்குமார், எம்.ஆர்.ஸ்வாமிநாதன். இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் விக்டரி பைனான்ஸ் எனும் தங்கள் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், ஒரு ஆண்டில் ஒரு லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் திருப்பி அளிக்கப்படும் என விளம்பரம் செய்துள்ளனர். இதன் அடிப்படையில் பலர் விளம்பரங்களை நம்பி முதலீடு செய்துள்ளனர்.
ஆரம்பத்தில் ஒரு சிலருக்கு மட்டும் பணத்தை கொடுத்த இவர்கள், அதன் பின் இழுத்து அடிக்க ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து இந்த நிறுவனத்தில் 15 கோடி ரூபாய் முதலீடு செய்த பைரோஜ் பானு என்பவர் தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரிடம் தனது பணத்தை ஹெலிகாப்டர் சகோதரர்கள் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காமல் இருப்பதாக புகார் அளித்துள்ளார். அரசியல் செல்வாக்கு இருப்பதால் தங்களை எதுவும் செய்ய முடியாது என அவர்கள் மிரட்டுவதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இரு சகோதரர்கள் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், இவர்களிடமிருந்து 10க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போதும் இந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் இருவர் மீதும் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடி வழக்கில் பணத்தை திருப்பி கேட்டவர்களிடம் மிரட்டியது தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.