திரிபுரா முதல்வரை கொல்ல முயற்சியா? – மூன்று பேர் கைது..!

Default Image

திரிபுரா முதல்வரின் இரட்டை பாதுகாப்பு வளையத்திற்குள் சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் திரிபுராவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களை ஒடுக்குவதாக கூறியதை அடுத்து, மியான்மரை தளமாகக் கொண்ட சர்வதேச போதைப்பொருள் மாஃபியாவிடம் இருந்து அச்சுறுத்தல்களைப் பெற்றதால் திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தற்போது Z+ பாதுகாப்பைக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், முதல்வர் பிப்லாப் குமார் தேப் கடந்த வியாழக்கிழமை மாலை தனது வழக்கமான நடைப் பயிற்சியின்போது, முதல்வரின் இல்லத்திற்கு அருகில் உள்ள சௌமுஹானி இந்திரா காந்தி நினைவு (ஐஜிஎம்) மருத்துவமனை பகுதியில் மூன்று பேர் கொண்ட ஒரு கார் பாதுகாப்பை மீறி முதல்வரை நோக்கி விரைந்து வந்தது.

இதனையடுத்து, கார் தடுத்து நிறுத்தப்பட்டு மூன்று இளைஞர்கள் கொலை முயற்சி மற்றும் பிற குற்றச்சாட்டுகளில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். எனினும்,அதே நேரத்தில் அவரது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காரை தடுத்து நிறுத்த முயன்றபோது காயமடைந்தார்.

இது தொடர்பாக, மேற்கு திரிபுரா காவல்துறை கண்காணிப்பாளர் மாணிக் தாஸ் கூறியதாவது: “வெளிப்புற பாதுகாப்பு வளையத்தில் இருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்கள் கட்டளைகளை மீறினர். மேலும், அவர்கள் உள்வளைய பாதுகாப்பின் உத்தரவுகளையும் மீறி,முதல்வரை நோக்கி அவசர அவசரமாக காரினை ஓட்டி வந்தனர். எனினும், முதலமைச்சரின் அருகில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் கார் நிறுத்தப்பட்டது”,என்று கூறினார்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட இளைஞர்கள் பின்னர் சுபம் சஹா (27), அமன் சாஹா (25) மற்றும் கோயிரிக் கோஷ் (24) என அடையாளம் காணப்பட்டனர். இதனால், அவசரமாக வாகனம் ஓட்டியது, அரசு ஊழியர்களின் கடமையை தடுத்தல், வேண்டுமென்றே பொது ஊழியர்களை காயப்படுத்தியது மற்றும் கொலை முயற்சி போன்ற வழக்குகளில் நீதிமன்றம் முன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இரண்டு நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக திரிபுராவில் கடந்த பல வாரங்களாக அகர்தலா மாநகராட்சி (AMC) உட்பட முக்கிய நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் மாலை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நேரங்களில் வாகனங்கள் வெளியே செல்ல அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்