நாளை முதல் 0.8% க்கும் மேலாக விலை அதிகரிக்கும் டாட்டா மோட்டார்ஸ் பயணிகள் வாகனம்..!
டாட்டா மோட்டார்ஸ் பயணிகள் வாகனத்தின் விலையானது நாளை முதல் 0.8% க்கும் மேலாக அதிகரிக்கும் என்று டாட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ்,எஃகு மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் கொள்முதல் விலையில் ஏற்பட்ட உயர்வை ஈடுசெய்வதை நோக்கமாகக் கொண்டு,அதன் பயணிகள் வாகனங்களின் விலையை அதிகரிக்க விரும்புவதாக, நிறுவனத்தின் வணிக பிரிவு தலைவர் ஷைலேஷ் சந்திரா கடந்த வாரம் தெரிவித்தார்.
இந்நிலையில்,டாடா மோட்டார்ஸ் நாளை (ஆகஸ்ட் 3 ஆம் தேதி) முதல் அதன் பயணிகள் வாகனங்களின் விலைகளை ஒவ்வொரு மாடல்களை பொறுத்து சராசரியாக 0.8% க்கும் மேலாக அதிகரிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அதன் வாடிக்கையாளர்கள், விநியோகஸ்தர் மற்றும் சப்ளையர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும்,சேவை செய்வதற்கும் ஒரு விரிவான ‘வணிக சுறுசுறுப்பு திட்டத்தை (Business Agility Plan) இயக்குவதாக அறிவித்தது.
விற்பனை அதிகரிப்பு:
டாட்டா நிறுவனம் அதன் மொத்த உள்நாட்டு விற்பனை 92% முதல் 51,981 யூனிட்கள் அதிகரித்துள்ளதாக நேற்று அறிவித்தது. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 27,024 யூனிட்களை மட்டுமே விற்றது.
அதேபோல,உள்நாட்டு சந்தையில் அதன் பயணிகள் வாகனம் (passenger vehicle) விற்பனை ஜூலை மாதத்தில் 30,185 யூனிட்களாக அதிகரித்துள்ளது,கடந்த ஆண்டு இதே மாதத்தில் 15,012 யூனிட்கள் மட்டுமே விற்பனை ஆனது.
மேலும்,உள்நாட்டு சந்தையில் வர்த்தக வாகன (commercial vehicle ) விற்பனை கடந்த ஜூலை 2020 ல் 12,012 யூனிட்டுகளில் இருந்து 21,796 யூனிட்களாக 81% வரை உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.