கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு ஆகஸ்ட் 5 முதல் பரிசோதனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு 5ம் தேதி முதல் கொரோனா தொற்று அறிவதற்கான பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் அறிவிப்பு.
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த வாரங்களாக குறைந்து இருந்தது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் ஓரிரு நாட்களில் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் 13 நிமிடங்களில் முடிவுகள் அறிவிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க, அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டவற்றில் இருந்து எந்த பரிசோதனையும் இன்றி, தொற்று பாதித்தவர்கள் எளிதாக வருவதே காரணம் என்று தெரிவிக்கின்றனர். கேரளாவில், நாள்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால், கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், கேரளாவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் கொரோனா நெகடிவ் சான்று வைத்திருக்க வேண்டும் என்றும் 14 நாட்களுக்கு முன்பு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
எனவே, கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு, வரும் 5ம் தேதி முதல் கொரோனா தொற்று அறிவதற்கான, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை கட்டாயம் என, அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்து உள்ளார். மேலும், மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.