இன்று இந்திய போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் நினைவு தினம்…!
இன்று இந்திய போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் நினைவு தினம்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரத்தினகிரி என்ற இடத்தில், 1856-ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை பெயர் கங்காதர் ராமசந்திர திலக். இவரது தாயார் பார்வதிபாய்.
பத்து வயது வரை ரத்தினகிரியில் படித்தார். பின்னர் அவரது தந்தை பணி காரணமாக புனேவுக்கு இடம் பெயர்ந்ததால் அங்கே கல்வியைத்தொடர்ந்தார். அவர் சுமார் பத்து வயதாக இருக்கும் போதே தாயை இழந்தார். அவருக்கு கேசவ் கங்காதர திலக் என்றே பெயரிட்டனர். அவரது தாயார் அவரை பால் என்று அழைத்தார். தாயார் நினைவாகவே திலகர் தனது பெயரை பால் கங்காதர திலக் என்று வைத்துக்கொண்டார். பாலகங்காதர திலகர், 1871-ல் சத்தியபாமா 11 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.
இந்தியச் செல்வம் ஆங்கிலேயரால் கொள்ளையடிக்கப்படுவது குறித்த தாதாபாய் நவ்ரோஜியின் நூலும், அதை அடிப்படையாகக் கொண்டு விஷ்ணு சாஸ்திரி ஆற்றிய உரைகளும் ஆங்கில அரசுக்கு எதிராக இவரைச் சிந்திக்கச் செய்தன. சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன் என்று முழங்கினார்.
இந்நிலையில், ஸ்ரீஅரவிந்தர் உட்பட ஏராளமானோர் இவரது தலைமையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேசிய காங்கிரஸில் 1889-ல் இணைந்தார். பல விடுதலை போராட்டங்களை முன்னின்று நடத்திய இவர், 1908-லிருந்து 1914 வரை சிறையில் இருந்தார்.
முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய இவர், மும்பையில், 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி, தனது 64-வது வயதில் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்.