கல்லூரி நிறுவனர் சிலையின் தலை மேல் வைத்து கேக் வெட்டிய பயிற்சி மருத்துவர்கள் 8 பேர் சஸ்பெண்ட் …!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் நிறுவனர் ராஜா முத்தையா சிலையின் தலையின் மேல் வைத்து கேக் வெட்டிய பயிற்சி மருத்துவர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் நிறுவனராகிய ராஜா முத்தையா செட்டியார் அவர்களின் முழு உருவச்சிலை இந்த பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சிலையின் தலையின் மேல் வைத்து கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக பல் மருத்துவ கல்லூரியை சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் சிலர் தங்களுடன் பயிலக்கூடிய பயிற்சி மருத்துவர் ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
கேக் வெட்டியது மட்டுமல்லாமல் இது குறித்த சில புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். எனவே, இதற்கு அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள், இன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து பல்கலைக்கழகத்தின் இரண்டாம் நிறுவனராகிய ராஜா முத்தையா செட்டியார் அவர்களின் சிலையின் தலையில் வைத்து கேக் வெட்டிய பயிற்சி மருத்துவர்கள் 8 பேரை பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று காலை 11 மணி அளவில் சஸ்பெண்ட் செய்துள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மருத்துவர்கள் தாங்கள் செய்தது தவறு தான் மன்னித்து விடுங்கள் என ஒரு வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.