விதைப்பை வலிக்கு காரணம் என்ன.?

Default Image

 

 

அந்தரங்க பகுதியில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதனை மருத்துவரிடம் சொல்ல பெண்களை விட ஆண்கள்தான் அதிக அளவில் தயங்குகின்றனர். வெட்கப்படுகின்றனர். குறிப்பாக விதைப்பையில் ஏற்படும் பிரச்சினை குறித்து பேசுவதற்கே ஆண்கள் தயங்கும் நிலை உள்ளது.

நிறைய ஆண்களுக்கு விதைப்பையானது அவ்வப்போது வலிக்கும். ஆனால் அப்படி வலிப்பதற்கான காரணங்கள் தெரியாது. மேலும் வலித்தாலும் அதனை மருத்துவரிடம் சொல்லி, அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள தயங்கி மறைக்கின்றனர். ஆனால் விதைப்பை வலிக்கிறது என்றால் அதற்கு பல காரணங்கள் உள்ளன.

அந்த காரணங்கள் என்னவென்று தெரிந்து, அதனை சரியான நேரத்தில் சரிசெய்யாவிட்டால், பெரும் பிரச்சனையை சந்திக்கக் கூடும். குறிப்பாக விதைப்பைகளை இழக்க நேரிடும். எனவே விதைப்பையானது வலிக்க ஆரம்பித்தால், உடனே சற்றும் தயங்காமல் மருத்துவரை சந்தியுங்கள்.

விதைப்பையானது சில நேரங்களில் இருமலின் போதும் வலிக்க ஆரம்பிக்கும். அப்படி எப்போதும் இருமலின் போது வலித்தால், அதற்கு காரணம் ஹெர்னியாவாக இருக்கலாம். ஒருவேளை உட்கார்ந்து எழும் போது, விதைப்பையானது பாரமாக இருப்பது போன்று இருந்தால், விதைப்பையில் உள்ள நரம்புகள் பருத்து உள்ளது என்று அர்த்தம். இதுபோன்று விதைப்பையில் வலி எடுக்க பல காரணங்கள் உள்ளன. இங்கு அவற்றில் சில காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

#வெரிகோசல் கட்டி

நீங்கள் எழுந்து நிற்கும் போது உங்கள் விதைப்பையானது பாரமாகவும், உட்கார்ந்திருந்தால் தான் நன்றாக உள்ளது என்பது போல் உணர்கிறீர்களா? அப்படியெனில் உங்களின் விதைப்பையில் உள்ள இரத்த நாளங்களானது பருத்து ஆங்காங்கு நரம்பு முடிச்சுக்கள் அதிகம் உள்ளது என்று அர்த்தம். இப்படி விதைப்பையில் முடிச்சுக்களானது அதிகரித்தால், வலியானது அதிகரித்து, கஷ்டமான சூழ்நிலையை ஏற்படுத்தும்.

காயங்கள் மற்றும் இரத்தக்கசிவு

எப்போதுதாவது உங்களின் விதைப்பையில் பலத்த அடிக்கு உள்ளாகியிருந்தால், சில நேரங்களில் அவ்விடத்தில் காயங்களுடன், இரத்தக்கசிவுகளும் ஏற்படும். எனவே அந்நேரத்தில் மருத்துவரிடம் போதிய சிகிச்சையை எடுத்துக் கொண்டு, நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.

ஹெர்னியா

ஹெர்னியா என்பது வெட்டுக்காயம் உள்ள இடத்திலோ அல்லது ஏதேனும் இணையும் இடத்திலோ புதிதாக ஒரு திசு வளர்வதைக் குறிக்கும். அதிலும் உங்களுக்கு அந்தரங்கப் பகுதியான விதைப்பையில் வலி இருந்தால், உங்களின் விதைப்பை உடலுடன் இணையும் இடத்தில் புதிதாக ஒரு திசு வளர்ந்திருக்கும். எனவே அவற்றை கவனித்து தாமதிக்காமல் உடனே அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிடுவது நல்லது.

சிறுநீரக_கற்கள்

உங்களுக்கு சிறுநீரக கற்கள் இருந்தாலும் விதைப்பையானது வலிக்க ஆரம்பிக்கும். எனவே அதனை கவனித்து, அதனை சரிசெய்ய முயலுங்கள்.

விரைச்சிரை திருகுதல்

சில நேரங்களில் அலறும் வண்ணம் வலியானது எடுத்தால், அதற்கு காரணம் விந்து தண்டானது திருகியிருந்தாலோ அல்லது விதைப்பைக்கு செல்ல வேண்டிய இரத்தமானது தடைப்பட்டிருந்தாலோ தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும். இந்நிலையில் உடனே மருத்துவரை சந்திக்காவிட்டால், உங்களின் ஒருவிதையை இழக்கக்கூடும்.

விரைமேல்நாள அழற்சி

உங்களின் விதைப்பையில் உள்ள விரைமேல் நாளங்களானது பாக்டீரியா அல்லது வைரஸினால் தாக்கப்பட்டிருந்தால், அவ்விடத்தில் அழற்சி ஏற்பட்டு கடுமையான வலியை ஏற்படுத்தும். பொதுவாக இந்த நிலையானது பால்வினை நோய்கள் அல்லது சிறுநீர் சார்ந்த தொற்றுக்களினால் ஏற்படும்.

விரைச்சிரை சிதைவு

விதைப்பையின் மேல் ஏதேனும் அடிப்பட்டால், அப்போது காயத்துடன், இரத்தக்கசிவு ஏற்படும். ஆனால் அதுவே கடுமையான அடியாக இருந்தால், விரைச்சிரையானது சிதைவு பட்டு, கடுமையான வலியை ஏற்படுத்தும். எனவே எப்போதும் ஆண்கள் தங்களின் விதைப்பையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்பெர்மடோசீல்

ஸ்பெர்மடோசீல் என்பது நீர்க்கட்டியாகும். இந்த நீர்க்கட்டியானது விதைகளுக்கு பின்னால் உருவாகக்கூடியது. ஒருவேளை இந்த நீர்க்கட்டியானது மிகவும் பெரியதானால், விதைப்பையானது பாரமாகி, வலியை ஏற்படுத்தும்.

டெஸ்டிகுலார் புற்றுநோய்

டெஸ்டிகுலார் புற்றுநோய் இருந்தாலும் விதைப்பையானது வலிக்க ஆரம்பிக்கும். பொதுவாக விதைப்பை புற்றுநோயானது நீங்கள் உங்கள் விதைப்பையில் வலி இல்லாமல் சிறு கட்டி இருப்பதை உணரும் போது, அதனை பரிசோதித்த பின் தான் தெரியவரும். ஆனால் டெஸ்டிகுலார் புற்றுநோயானது முற்றி பெரிய கட்டியாக மாறும் போது, வலியுடன், பாரமாகவும் இருக்கும்.

நரம்புபாதிப்பு

இந்த வகையான நரம்பு பாதிப்பானது விதைப்பையில் அளவுக்கு அதிகமாக அழுத்தம் கொடுக்கும் போது, அவ்விடத்திற்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்படும். இப்படி அவ்விடத்தில் உள்ள நரம்பானது பாதிக்கப்பட்டால், கடுமையான வலியை சந்திக்கக்கூடும். பொதுவாக இது அளவுக்கு அதிகமாக பைக், சைக்கில் போன்றவற்றை ஓட்டுவதால் ஏற்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்