கல்யாணமாகி 60 நாட்களில் குழந்தை பிறந்து விடுமா…? – அமைச்சர் பெரியசாமி
நகை கடன் தள்ளுபடி குறித்த கேள்விக்கு கல்யாணமாகி 60 நாட்களில் குழந்தை பிறந்து விடுமா? என அமைச்சர் பெரியசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த மே 7-ஆம் தேதி அன்று தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றார். அவர் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முக்கியமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், திமுக தேர்தலின்போது நீட் தேர்வு ரத்து, நகை கடன் தள்ளுபடி, குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை மற்றும் பல அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் சேலத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் நகை கடன் தள்ளுபடி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கல்யாணமாகி 60 நாட்களில் குழந்தை பிறந்து விடுமா? நகை கடன் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும். குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க தேர்தல் சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி விரைவில் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.