அண்ணாச்சி, அண்ணாச்சி திமுக சொன்னது என்னாச்சி… திமுகவை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்!
திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம்.
திமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதன்படி, திமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வீடுகள் முன்பதாக பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் போடியில் தனது இல்லம் முன்பாக முன்னாள் துணை முதலமைச்சரும், கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் போராட்டம் நடத்தி வருகிறார்.
அப்போது பேசிய அவர், திமுக தலைவர், முதலமைச்சர் முக ஸ்டாலின், சொன்னதை எல்லாம் நிறைவேற்றாமல், ஜனநாயகதிற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. தேர்தலுக்கு முன்பாக நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்திருந்தார்கள். அதனை திமுக மறந்தாலும், மாணவர்களும், தமிழக மக்களும் மறக்கவில்லை என கூறியுள்ளார்.
மேலும், சொன்னதை செய் திமுகவே, நீட் தேர்வை ரத்து செய், தமிழ்நாட்டு மாணவர்களை ஏமாற்றாதே என்றும் அண்ணாச்சி, அண்ணாச்சி சொன்னது எல்லாம் என்னாச்சி, விண்ணைமுட்டுது விலைவாசி எனவும் ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மத்தியில் தெரிவித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
இதுபோன்று திமுக அரசை கண்டித்து சேலம் மாவட்டம் எடப்பாடியில் தனது இல்லம் முன்பு முன்னாள் முதல்வர், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, தேர்தல் வாக்குறுதி என்னாச்சி, நீட் தேர்வை ரத்து செய்றேன் சொன்னது என்னாச்சி என்ற வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, மாணவர்கள் கல்வி கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து மற்றும் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் அளித்த திமுக அரசு, தற்போது மக்களை ஏமாற்றி வருகிறது என்றும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.