கோவிஷீல்ட் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 93% பாதுகாப்பளிக்கிறது – ஆய்வில் தகவல்!
கோவிஷீல்ட் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 93% பாதுகாப்பளிப்பதுடன், உயிரிழப்பிலிருந்து 98% பாதுகாப்பளிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய தடுப்பூசிகள் அதிகளவில் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 93 சதவீத பாதுகாப்பையும், உயிரிழப்பிலிருந்து 98 சதவீத பாதுகாப்பையும் அளிக்கிறது என இராணுவ மருத்துவக் குழு மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள என்ஐடிஐ ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் அவர்கள் 15 லட்சம் மருத்துவர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவு கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த கோவிஷீல்ட் தடுப்பூசி டெல்டா வகை கொரோனாவில் இருந்து அதிகம் பாதுகாப்பை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் நம்பிக்கையுடன் தடுப்பூசியை செலுத்தி கொள்ளுங்கள் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.