ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு முக்கிய பதவி – மணிப்பூர் முதல்வர் செயலகம் அறிவிப்பு..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு மணிப்பூர் காவல் துறையில் கூடுதல் எஸ்.பி பதவி வழங்குவதாக மணிப்பூர் முதலமைச்சரின் செயலகம் அறிவித்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மூன்று நாட்களாக 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்தியா சார்பாக 127 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பதக்கம்:
அதன்படி, நடைபெற்ற மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு,ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அவுட் ஜெர்க் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கம் பெற்றார் .இதனால்,தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வென்றுள்ள முதல் பதக்கமாக இது கருத்தப்படுகிறது. இதில்,சீனாவின் ஹோ சிஹாய் 210 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை வென்றார்.
புதிய சாதனை:
இதற்கு முன்னதாக இந்திய வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி கடந்த 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற சிட்னி ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற நிலையில்,தற்போது மீராபாய் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இதனால்,ஒலிம்பிக் வரலாற்றில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியா இதுவரை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது.மேலும்,ஒலிம்பிக்கில் முதல் வெள்ளிப் பதக்கத்தை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
பரிசுத் தொகை அறிவிப்பு:
மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு புதிய சாதனை படைத்துள்ளதையடுத்து,முன்னதாக அவருக்கு ரூ.ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் அறிவித்தார்.
முக்கிய பதவி:
இந்நிலையில்,மீராபாய் சானுவுக்கு மணிப்பூர் காவல் துறையில் கூடுதல் எஸ்.பி (விளையாட்டு) பதவி வழங்குவதாக மணிப்பூர் முதலமைச்சரின் செயலகம் அறிவித்துள்ளது.
Manipur Government has decided to appoint Olympic Silver Medallist Saikhom Mirabai Chanu as Additional Superintendent of Police (Sports) in the police department: Chief Minister’s Secretariat, Imphal
(File pic) pic.twitter.com/i7MWFKeFfG
— ANI (@ANI) July 26, 2021
தங்கப்பதக்கம் வெல்ல வாய்ப்பு:
ஒலிம்பிக்கில் 49 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற சீன வீராங்கனை ஹோ சிஹாய்க்கு ஊக்க மருந்து சோதனை நடைபெறுவதால் மீராபாய்க்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீராபாய் சானு – ஆரம்பம்:
ஆரம்பத்தில் கிளாஸ்கோவின் 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் 48 கிலோ எடை வகுப்பில் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார்.பெண்கள் 48 கிலோ பிரிவில் சானு 2016 ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.2017 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அனாஹெய்மில் நடைபெற்ற உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 194 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்று மிகப்பெரிய சாதனை படைத்தார்.
இதனை தொடர்ந்து,2018 ஆம் ஆண்டு கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.தற்போது,டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
விருது:
விளையாட்டில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இவருக்கு 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுகளை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.