துபாயிலிருந்து சென்னைக்கு 8 கிலோ தங்கம் கடத்தல்..!இருவர் கைது..!
துபாயிலிருந்து சென்னைக்கு 8 கிலோ தங்கம் கடத்தி வந்த இருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. தங்கம் விலை உயர்வை எண்ணினால் நடுத்தர மக்களுக்கு தங்கம் வாங்குவது என்பது கனவாகிவிடும் என்பது போல் உள்ளது. இருந்தபோதிலும், தங்க கடத்தல் செயல்களும் ஆங்காங்கு நடைபெறுகிறது. நேற்று துபாயிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சிறப்பு விமானம் வந்தது.
இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனால் விமானம் சென்னைக்கு வந்த பிறகு, அதிலிருந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளனர். அதில் இரண்டு நபர்கள் கேள்விகளுக்கு முரணாக பதில் அளித்துள்ளனர். அதனால் அவர்களின் உடமைகளை சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
அரிசி குக்கர், ஜுசர், மிக்சி ஆகிய வீட்டு உபயோக பொருட்களில் உள்ள மோட்டர்களில் தங்கத்தை மறைத்து வைத்துள்ளனர். ரூ.4 கோடியே 3 லட்ச மதிப்பிலான 8 கிலோ 170 கிராம் அளவிலான தங்கத்தை இவர்கள் கடத்தி வந்திருப்பது தெரியவந்துள்ளது. கடத்தி வந்த இருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.