நாடாளுமன்றத்துக்கு டிராக்டர் ஓட்டி வந்து ராகுல் காந்தி போராட்டம்!!
வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரித்து நாடாளுமன்றத்துக்கு அருகே டிராக்டர் ஓட்டி வந்து ராகுல் காந்தி போராட்டம்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் அனுமதி பெற்று மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். இந்த சூழலில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திடீரென நாடாளுமன்றம் வளாகம் அருகே சிவப்பு நிற டிராக்டர் ஓட்டி வந்து, விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளார்.
இதில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தலைவர்களும் அவருடன் இருந்தனர். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் டிராக்டர் வாகனத்தில் அமர்ந்திருந்தனர். அத்துடன் கட்சியின் ஆதரவாளர்கள் பதாகைகளை ஏந்தியும் அந்த வாகனத்தை சுற்றி நின்றனர்.
திடீரென ராகுல் காந்தி டிராக்டரை ஓட்டி வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றம் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் நேரம் என்பதாலும், விவசாயிகளுக்கு ஆதரவாக ட்ராக்டர் ஓட்டி ராகுல் காந்தி போராட்டம் நடத்தி வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும், வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை என்றும் அவற்றை திரும்ப பெற வேண்டும் எனவும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஆகவே, இந்த விஷயத்தை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்வதாகவும், அரசு விவசாயிகளின் போராட்டத்துக்கு கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்துவதால் தான், தான் டிராக்டரை ஓட்டி வந்திருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.