இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணி..!
இலங்கை அணி 18.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 126 ரன்கள் எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, இந்திய அணி முதலில் களமிறங்கி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 164 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 50, தவான் 46 ரன்கள் எடுத்தனர்.
165 ரன்கள் இலக்குடன் இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக அவிஷ்கா பெர்னாண்டோ, மினாத் பானுகா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே மினாத் பானுகா 10 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர், இறங்கிய தனஞ்சய் தி சில்வா வந்த வேகத்தில் 9 ரன்னில் வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களில் அவிஷ்கா பெர்னாண்டோ 26 ரன்னில் சஞ்சு சாம்சனிடம் கேட்சை கொடுத்தார்.
அடுத்து களம்கண்ட ஆஷென் பண்டாரா 9 ரன் இருக்கும்போது ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் போல்ட் ஆனார். அதிரடியாக விளையாடிய சரித் அசலங்கா அரைசதம் அடிப்பார் என எதிர்க்கப்பட்ட நிலையில், 44 ரன்னில் பிருத்வி ஷாவிடம் கேட்சை கொடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களம் கண்ட அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை. இறுதியாக இலங்கை அணி 18.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 126 ரன்கள் எடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் 4, தீபக் சாஹர் 2, ஹார்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, சாஹல், வருண் சக்ரவர்த்தி தலா 1 விக்கெட்டை பறித்தனர். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது. 2-வது போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.