அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு!
வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததால் முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு.
கடந்த அதிமுக ஆட்சி முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் சொத்து குவித்ததாக எழுந்த புகாரை அடுத்து, அவரது வீடு உள்ளிட்ட சொந்தமான 26 இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக சோதனையிட்டனர். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சோதனையில் 25 லட்சம் ரொக்கம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்றும் பின்னர் விஜயபாஸ்கர், அவரது மனைவியின் வங்கி லாக்கர்களை சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு துறை முடிவு செய்துள்ளதாக தகவல் கூறப்பட்டது. இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், எம்.ஆர்.விஜய பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி, சகோதரர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு (FIR) செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2016 தேர்தல் வேட்பு மனுவில் ரூ.2.51 கோடி சொத்து இருந்ததாக தெரிவித்த நிலையில், கடந்த தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.8.62 கோடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.