இதய நோயாளிகளுக்கேற்ற ப்ராக்கோலி சூப் செய்வது எப்படி தெரியுமா…?
சாதாரணமாகவே ப்ராக்கோலி அதிக சத்துக்கள் கொண்டது. எனவே, அனைவரும் உணவில் இதை எடுத்து கொள்ளலாம். குறிப்பாக இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ப்ராக்கோலி சூப் ஒரு நல்ல உணவாகும். இந்த ப்ராக்கோலி சூப் எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- ப்ராக்கோலி
- இஞ்சி
- பூண்டு
- கருவேப்பிலை
- கொத்தமல்லி
- புதினா
- மிளகுத்தூள்
- துளசி இலை
- எலுமிச்சை பழம்
- சின்ன வெங்காயம்
- தக்காளி
செய்முறை
முதலில் குக்கரில் தக்காளி, ப்ராக்கோலி, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, உப்பு, பட்டை மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்துவிடவேண்டும்.
குக்கரில் 3 விசில் வந்ததும் இறக்கி விட வேண்டும். ஆவி அடங்கியதும் குக்கர் மூடியைத் திறந்து நன்றாக கடைய வேண்டும். அதன் பின் இதனுடன் வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து இளம் சூடாக பருக வேண்டும்.
பயன்கள்
ப்ராக்கோலியில் அதிகளவு வைட்டமின் சி சத்து உள்ளது. எனவே இது மூளையின் திறனை அதிகரிக்க உதவுவதுடன் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தவிர்க்கவும் உதவுகிறது. மேலும் நினைவாற்றலை தக்க வைக்க உதவ கூடிய ப்ரோக்கோலி, உடலில் ரத்த ஓட்டம் தடையின்றி நடைபெறவும் உதவுகிறது. மேலும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கவும் இது உதவுகிறது.
இந்த ப்ராக்கோலி சூப் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை தடுக்கவும் இது உதவுகிறது. இதில் அதிகளவு பொட்டாசியம் உள்ளதால் இதயம் வலிமை பெற உதவுவதுடன் இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதையும் தடுக்கிறது. மேலும் இதிலுள்ள கால்சியம் மற்றும் நார்சத்து காரணமாக மலச்சிக்கலைத் தடுக்கவும் இது உதவுகிறது.