குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகையை உடனே வழங்க வேண்டும் – கமல்ஹாசன்

Default Image

குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் முக்கியமான ஒன்றாக அமைந்திருந்தது. இந்த திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவுகிறது.

இந்த நிலையில், குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நமது பொருளியலில் இல்லத்தரசிகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களின் தியாகமும், உழைப்பும், அர்ப்பணிப்பும் அளவீடற்றவை. அதற்குரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை.

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்கிற சிந்தனையை முதன்முதலில் முன்வைத்த இந்திய அரசியல் கட்சி மக்கள் நீதி மய்யம். குடும்பத் தலைவிகள் பொருளாதாரத்திற்காக கணவனைச் சார்ந்திருக்கும் சூழ்நிலையே நிலவுகிறது. தங்களது தனிப்பட்ட ஆர்வம், கனவுகளுக்காக அவர்களால் செலவு செய்ய முடியாத நிலைமையில்தான் பெரும்பான்மை பெண்கள் இருக்கிறார்கள்.

குடும்ப தலைவிகளுக்கு ஊதியம் எனும் மக்கள் நீதி மய்யத்தின் முன்னெடுப்பு பெண்களுக்கு மிகப்பெரிய பொருளாதார சுதந்திரத்தை அளிக்கக் கூடியது. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் மக்கள் நீதி மய்யத்தின் திட்டத்திற்குக் கிடைத்த வரவேற்பினைப் பார்த்து பிற அரசியல் கட்சிகளும் இதை தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் சேர்த்துக்கொண்டன. தமிழகத்தில் துவங்கி அஸ்ஸாம் சட்டமன்ற தேர்தல் வரை இது எதிரொலித்தது.

திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தது. இன்றைய பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைந்த தொகை. இல்லத்தரசிகளுக்கு எதுவுமே இல்லாத நிலையில் இந்தச் சிறிய தொகையாவது அவர்களுக்குக் கிடைக்கிறதே என்றுதான் கருதவேண்டியுள்ளது. ஒரு சிறு துவக்கம் என்கிற அளவில் மனதைத் தேற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை திட்டம் எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது பற்றிய அறிவிப்புகள் கவர்னர் உரையில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. சமூகநலத்திட்டங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழும் தமிழகம் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விஷயத்தில் சுணக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல.

எனவே, திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட இந்தத் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும். அதற்கான அறிவிப்புகளை நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்