ராட்சத விண்கல்லால் பூமிக்கு ஆபத்து ஏற்படுமா?
பூமியை நோக்கி ராட்சத விண்கல் ஒன்று வந்துகொண்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
விண்வெளியில் லட்சக்கணக்கான விண்கற்கள் இருக்கின்றன. இதுவரை பூமியை 11 லட்ச விண்கற்கள் சுற்றி வருவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கற்களின் அளவு பெரிய பாறை முதற்கொண்டு குன்று அளவிலும் பெரியதாக இருக்கக்கூடும். இந்த விண்கற்கள் பூமியின் அருகே கடந்து செல்லும். சில விண்கற்கள் பூமி மீதும் விழுந்துள்ளது.
பெரும்பாலும், பூமி மீது விழும் விண்கற்கள் வளிமண்டலத்தில் வெடித்து பூமியை நோக்கி வரும்பொழுது காற்று உராய்வு காரணமாக தீப்பிடித்து எரிந்துகொண்டே வரும். அதனால் இந்த கற்கள் பூமியை வந்தடைவதற்குள் சாம்பலாகிவிடும். சில கற்கள் எரிந்த நிலையிலேயே பூமி மீது விழும். இரவு நேரத்தில் வானத்தில் தீப்பிடித்து எரிந்துகொண்டு ஏதோ ஒன்று நகர்வதை நாம் பார்க்க முடியும்.
இந்த விண்கற்கள் எரிவது தான் இப்படி நமக்கு தெரியும். அதே போன்று தற்போது பூமியை நோக்கி விளையாட்டு மைதானம் அளவில் இருக்கக்கூடிய ராட்சத விண்கல் ஒன்று வந்துகொண்டு இருக்கிறது. இது பூமியை நோக்கி வருகிற 24 ஆம் தேதி அருகில் வரக்கூடும். இந்த விண்கல்லிற்கு 2008 ஜி.ஓ. 20 என்று பெயரிட்டுள்ளனர்.
இருந்தபோதிலும், இந்த விண்கல்லால் பூமிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது பூமியில் இருந்து 59 லட்சத்து 38 ஆயிரம் கிமீ தூரத்தில் செல்வதால் பூமியின் புவியீர்ப்பு விசைக்குள் வராது என்றும் இந்த ராட்சத விண்கல்லால் பூமிக்கு பாதிப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.