ராயல் லண்டன் கோப்பை போட்டியில் இருந்து விலகல் – ஸ்ரேயாஸ் ஐயர் அறிவிப்பு..!
ராயல் லண்டன் கோப்பை போட்டியில் இருந்து விலகுவதாக,இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
ராயல் லண்டன் கோப்பை எனப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடரில், லங்காஷயர் அணிக்காக விளையாட முன்னதாக இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ஒப்பந்தமானார். இந்த போட்டியானது வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில்,இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஸ்ரேயாஸ் ஐயர் ராயல் லண்டன் கோப்பை போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும்,இது குறித்து அவர் கூறியதாவது:
“இந்த கோடையில் லங்காஷயர் அணிக்காக விளையாட முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் லங்காஷயருக்கான எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டில் விளையாடுவேன் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
இது தொடர்பாக,லங்காஷயரின் கிரிக்கெட் இயக்குனர் பால் அலோட் கூறியதாவது: “எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டுக்கு ஸ்ரேயாஸை வரவேற்க நாங்கள் முழுமையாக எதிர்பார்த்திருந்தோம்,ஆனால்,தற்போது நாங்கள் மிகவும் ஏமாற்றமடைகிறோம்.”என்று கூறினார்.
இருப்பினும்,இறுதியில் ஸ்ரேயாஸின் நீண்டகால உடற்பயிற்சி மிக முக்கியமானது என்பதைக் கருத்தில்கொண்டு லங்காஷயர் கிரிக்கெட் நிர்வாகம் அவரின் முடிவை முழுமையாக மதிக்கிறது.
ஸ்ரேயாஸ் விரைவில் முழுவதுமாக குணமடைய நாங்கள் அனைவரும் சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.மேலும் அவருடன் நான் நடத்திய உரையாடல்களில் இருந்து,எதிர்காலத்தில் மீண்டும் அணிக்காக விளையாட அவர் வருவார் என நம்புகிறோம்” என்று கூறினார்.
முன்னதாக,கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஐயருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது, அதன் பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதன் விளைவாக,அவர் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 போட்டிகளிலும்,இலங்கை அணிக்கெதிரான தொடரிலும் கலந்துக் கொள்ளவில்லை.இதனையடுத்து,காயத்திலிருந்து தற்போது மீண்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர்,பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறார்.
ஸ்ரேயாஸ் ஐயர்:
வலது கை பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ்,2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ரூ.2.6 கோடி மதிப்பீட்டில் ஏலம் எடுக்கப்பட்டார்.அதன்படி,நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 14 போட்டிகளில் விளையாடி 439 ரன்களை எடுத்தார்.
இதனால்,2015 ஆம் ஆண்டிற்கான முக்கியமான வீரர்களில் (எமெர்ஜிங் பிளேயர்) இவருக்கு 9 ஆவது இடம் கிடைத்தது.அதன்பின்னர்,கௌதம் கம்பீருக்கு பதிலாக இவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.இவர் இதுவரை 21 ஒருநாள் மற்றும் 23 டி20 போட்டிகளில் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.