உங்களிடம் 50 ஆண்டுக்கும் மேலான பழமையான வாகனம் உள்ளதா?,அப்படியென்றால் இதோ உங்களுக்கான செய்தி…!
பழமையான விண்டேஜ் கார்களுக்கான அரசாங்கத்தின் புதிய விதிகளை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
விண்டேஜ் வாகனங்களுக்கான புதிய விதிகளின் படி ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அவற்றின் அசல் பதிவு அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும்,புதிய பதிவு ஒரு தனித்துவமான விஏ தொடரின் கீழ் நடைபெறும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விண்டேஜ் மோட்டார் வாகனங்கள்:
50+ பழமையான மற்றும் அவற்றின் அசல் வடிவத்தில் பராமரிக்கப்பட்டுள்ள அனைத்து இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விண்டேஜ் மோட்டார் வாகனங்கள் என வரையறுக்கப்படுகின்றன. அவை வழக்கமான மற்றும் வணிக நோக்கங்களுக்காக இயக்கப்படாது.எனினும்,அதற்கு சிறப்பு பதிவு பெற வேண்டும்.
சமீபத்தில்,மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்,மோட்டார் வாகன சட்டம் 1989 இன் திருத்தத்தில் புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது.
அதன்படி,15 ஆண்டுகள் நிறைவடைந்த வாகனங்கள்,பிட்னஸ் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும்,பிட்னஸ் சோதனையில் தோல்வியுற்ற அல்லது அதன் பதிவு சான்றிதழைப் புதுப்பிக்கத் தவறிய வாகனங்களை மீண்டும் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தது.
அமைச்சர் நிதின் கட்கரி:
இந்நிலையில்,இது தொடர்பாக,சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: “வெவ்வேறு மாநிலங்களில் பதிவு செய்யும் செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகள் எதுவும் திருத்தப்பட்ட விதிகளில் இல்லை.மாறாக,புதிய விதிகள் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு பழைய எண்களைத் தக்க வைத்துக்கொள்வது மற்றும் புதிய பதிவுகளுக்கான விஏ தொடர் (தனித்துவமான பதிவு குறி) போன்ற முக்கிய அம்சங்களுடன் தொந்தரவில்லாத செயல்முறையை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
With an aim to preserve and promote the heritage of vintage vehicles, the MoRTH has formalised the registration process of Vintage Motor Vehicles in India.
— Nitin Gadkari (@nitin_gadkari) July 16, 2021
புதிய விதிகள் என்ன சொல்கின்றன?
1. ஒரு விண்டேஜ் மோட்டார் வாகனம் வழக்கமான அல்லது வணிக நோக்கங்களுக்காக சாலைகளில் இயக்கப்படக் கூடாது.
2. எந்த கார்கள் விண்டேஜ் கார்களாக வரையறுக்கப்படும்? 50 ஆண்டுகளில் 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் விண்டேஜ் மோட்டார் வாகனங்கள் என வரையறுக்கப்படும் என்று விதிகள் கூறுகின்றன. ஆனால்,அந்த வாகனத்தில் மாற்றங்கள் ஏதும் செய்யக்கூடாது.அதன் அசல் வடிவத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
3. பதிவு அல்லது மறு பதிவுக்கான விண்ணப்பமானது படிவம் 20 இன் படி செய்யப்படும்.
4. மாநில பதிவு செய்யும் ஆணையமானது, படிவம் 23 ஏ படி 60 நாட்களுக்குள் பதிவு சான்றிதழை வழங்கும்.
5. புதிய பதிவு விதிகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அவற்றின் அசல் பதிவு அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றன. புதிய பதிவுக்கு, பதிவு குறி XX VA YY ஆக ஒதுக்கப்படும். இங்கே, விஏ என்பது விண்டேஜையும், எக்ஸ்எக்ஸ் என்பது மாநில குறியீட்டையும், ஒய்ஒய் இரண்டு எழுத்துத் தொடர்களையும், “8” என்பது மாநில பதிவு அதிகாரத்தால் ஒதுக்கப்பட்ட 0001 முதல் 9999 வரையிலான எண்ணைக் குறிக்கும்.
6. புதிய பதிவுக்கான கட்டணம் ரூ.20,000 ஆகவும், பின்னர் மறு பதிவு கட்டணம் ரூ. 5,000 ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.