மும்பையில் கனமழை: உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு!
மும்பையில் இரு வேறு இடங்களில் மழை தொடர்பான விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று முதல் மிக கனமழை பெய்து வருகிறது. நேற்று 6 மணி நேரத்தில் மட்டும் 10 செ.மீ மழை அங்கு பெய்திருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக மும்பையின் செம்பூர் மற்றும் விக்ரோலி உள்ளிட்ட இரு வேறு இடங்களில் குடியிருப்பு வீடுகளில் இடிந்து விழுந்துள்ளன. இந்த இடிபாடுகளில் சிக்கி மொத்தம் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மும்பை செம்பூரில் மண் சரிவால் குடிசைகள் இடிந்ததில் இறந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆகவும், விக்ரோலியில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.மேலும் மும்பை அருகே தானேவிலும் பல இடங்களில் குடிசை வீடுகள் இடிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மழை காரணமாக மும்பையில் நடைபெற்ற விபத்துகளில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதே சமயத்தில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் பிரதமர் மோடி பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து மாநில அரசு சார்பில் பல்வேறு நிவாரண உதவிகளை, அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மும்பையில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வரும் காரணமாக புற ரயில் சேவை மற்றும் சாலை வழி போக்குவரத்துக்கும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதித்துள்ளது. இதனிடையே நேற்றைய தினம் வானிலை ஆய்வு மையம் சார்பில் ஆரஞ்சி அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது ரெட் அலெர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது.
மும்பையில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, வீடுகள் இடிபாடு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இடிபாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவி வருகிறது.
Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who lost their lives due to wall collapses in Mumbai. Rs. 50,000 would be given to those injured.
— PMO India (@PMOIndia) July 18, 2021