இந்தியாவுக்கு இரண்டு அதிநவீன (MH-60R) மல்டி-ரோல் ஹெலிகாப்டர்களை வழங்கிய அமெரிக்கா!!
இந்திய கடற்படைக்கு இரண்டு அதிநவீன வாய்ந்த MH-60R ஹெலிகாப்டர்களை அமெரிக்க கடற்படை வழங்கியுள்ளது.
அதிநவீன வாய்ந்த MH-60R மல்டி ரோல் ஹெலிகாப்டர்களை முறையாக இந்தியக் கடற்படைக்கு ஒப்படைக்கும் விழா சான் டியாகோவில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் இன்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்துவும் கலந்து கொண்டார். அப்போது, இந்திய கடற்படைக்கு இரண்டு அதிநவீன (MH-60R) மல்டி ரோல் ஹெலிகாப்டர்களை அமெரிக்க கடற்படை வழங்கியுள்ளது.
பாதுகாப்பு துறையில் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இது ஒரு பெரிய மைல்கல்லாக இருக்கும். இந்தியக் கடற்படைக்கு 24 ஹெலிகாப்டர்கள் வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதில் முதலாக இரண்டு ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்பின் அமெரிக்க கடற்படைத் தளபதி கென்னத் வைட்செல் மற்றும் இந்திய கடற்படையின் துணைத் தலைவர் ரவ்னீத் சிங் ஆகியோருக்கு இடையே ஹெலிகாப்டர் குறித்த ஆவணங்கள் பரிமாறப்பட்டன. இந்திய மதிப்பில் சுமார் ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பில் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து வெளிநாட்டு இராணுவ விற்பனையின் கீழ் 2.4 பில்லியன் டாலர் செலவில் கொள்முதல் செய்து வருகிறது. 2020 பிப்ரவரி மாதம் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் இந்திய பயணத்திற்கு வந்தபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
எம்.எச்-60ஆர் ஹெலிகாப்டரில் அதிநவீன ஏவியோனிக்ஸ் மற்றும் சென்சார்களுடன் பல பயணங்களை ஆதரிக்க வடிவமைக்கப்பட்ட வானிலை ஹெலிகாப்டர்கள். மேலும் இவை போர்க் கப்பல்கள், விமானம் தாங்கிகள் ஆகியவற்றிலிருந்து இயங்குகின்றன. ஹெலிகாப்டர்கள் இந்தியா சார்ந்த பல தனித்துவமான உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களுடன் மாற்றியமைக்கப்படும் என்று இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் விவேக் மாத்வால் தெரிவித்தார்.
இந்த ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையின் முப்பரிமாண திறன்களை மேலும் மேம்படுத்தும். இந்த சக்திவாய்ந்த ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கு இந்திய முதல் குழு தற்போது அமெரிக்காவில் பயிற்சி பெற்று வருகிறது. இந்த ஒப்பந்தம் கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்துவதாகவும், “இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எங்கள் ஒருங்கிணைந்த போர் திறனை வலுப்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.
2025க்குள் 24 ஹெலிகாப்டர்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. MH-60R என்பது அமெரிக்க கடற்படையின் முதன்மை நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் மேற்பரப்பு எதிர்ப்பு போர் ஹெலிகாப்டர் ஆகும். மேலும் இது தேடல், மீட்பு மற்றும் விநியோக பணிகள் செய்யக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது..