“டெஸ்லா சைபர்ட்ரக் வாகனத்தின் கதவுகளில் கைப்பிடிகள் இருக்காது” -எலோன் மஸ்க் …!
டெஸ்லா மின்சார சைபர்ட்ரக் வாகனத்தின் கதவுகளில் கைப்பிடிகள் இருக்காது என்று அதன் நிறுவனர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகின் பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் சைபர்ட்ரக்கை ஒரு பெரிய திறன் கொண்ட ‘மின்சார பிக்-அப் டிரக்’ என்று அழைக்கலாம்.ஏனெனில்,சைபர்ட்ரக் ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு இணையான செயல்திறனைக் கொண்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பரில் முதன்முதலில் சைபர்ட்ரக் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.இந்த சைபர்ட்ரக் டெக்சாஸில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.
சமீபத்தில்,டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் சைபர்ட்ரக் குறித்து கூறுகையில்:”சைபர்ட்ரக்கானது 2019 ஆம் ஆண்டில் காட்சிப்படுத்தப்பட்டதைப் போலவே இருக்கும்.மேலும்,வாகனங்களில் வழக்கமாக உள்ள கதவுகளுக்கு பதிலாக,சைபர்ட்ரக்கில் உரிமையாளரை அடையாளம் கண்டு அதன் கதவுகளைத் திறக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது”, என்று தெரிவித்தார்.
சைபர்ட்ரக்கானது 6.5 வினாடிகளுக்குள் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் மற்றும் ஒரு முறைசார்ஜ் செய்தால் 400 கி.மீ.க்கு மேல் செல்லும் திறன் கொண்டது.இதில்,6 பேர் அமர்வதற்கான இருக்கை வசதி உள்ளது. மேலும்,இதில் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகளுக்கு பதிலாக சாம்சங் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இதற்காக 400 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் சாம்சங் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
டெஸ்லா சைபர்ட்ரக் விலை ரூ.28 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.ஆனால்,விற்பனைக்கு வர கால தாமதமாகிறது என்றாலும்,தற்போது உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2,00,000 க்கும் அதிகமான ஆர்டர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.