டி-20 தொடர் :ஆஸ்திரேலியாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி …!
டி-20 தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி,அத்தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸூக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து டி – 20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில்,இரு அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி-20 போட்டியானது இன்று நடைபெற்றது.இதில்,டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி,களமிறங்கிய எவின் லூயிஸ் தனது சிறப்பான பேட்டிங் திறமையால் 34 பந்துகளில் 9 சிக்சர், 4 பவுண்டரி என 79 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர்,20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு மொத்தம் 199 ரன்கள் எடுத்தது.
இதனால்,200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய வீரர்கள் களமிறங்கினர்.ஆனால்,20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை மட்டுமே எடுத்தனர்.மேலும்,வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஷெல்டன் காட்ரெல், ரஸ்ஸல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்காரணமாக,வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.மேலும்,இப்போட்டியில் ஆட்டநாயகனாக எவின் லூயிஸ் தேர்வு செய்யப்பட்டார்.இதற்கிடையில்,விளையாட்டின்போது,ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச்சிற்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து,இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் தொடர் ஜூலை 20 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.