கீழடி 7-ஆம் கட்ட ஆய்வில் அழகிய பெண் முகம் கண்டுபிடிப்பு..!
கீழடி 7-ஆம் கட்ட ஆய்வில் அழகிய பெண் முகம் கொண்ட சுடுமண் பொம்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் ஏழாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் அகரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில், உறைகிணறு, கருப்பு மற்றும் சிவப்பு நிற பானைகள், நத்தை கூடுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது இவ்விடத்தில் தோண்டப்பட்ட மூன்றாவது குழியில் 65 செ.மீ. ஆழத்தில் அழகிய பெண் முகம் கொண்ட சுடுமண் பொம்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பால் ஆய்வாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
மேலும், இந்த பெண் முகம் கொண்ட பொம்மை நேர்த்தியான வடிவமைப்போடு அமைக்கப்பட்டுள்ளது. கண், காத்து, மூக்கு, வாய் என அழகிய முறையில் வடிவமைத்துள்ளனர்.
நெற்றி மற்றும் காதுகளில் ஆபரணங்களும், தலைமுடியை இடது பக்கம் எடுத்து கொண்டை போட்டுள்ள வடிவமைப்பில் அமைந்துள்ளது. இதனால் இந்த சுடுமண் பொம்மையின் காலம் குறித்து தெரிவதற்கு ஆய்விற்கு அனுப்ப உள்ளனர். அகரத்தில் கிடைத்து வரும் கலைநயம் கொண்ட பொருட்களால் அங்குள்ள ஆய்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.