செப்டம்பர் முதல் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வர அனுமதியா? – விப்ரோ தலைமை அலுவலர் …!
செப்டம்பர் மாதம் முதல் ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வர, அனுமதிக்க வாய்ப்புள்ளது என்று விப்ரோவின் தலைமை ஹெச்.ஆர் சவுரப் கோவில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பரவிய கொரோனா பரவல் காரணமாக,ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.இதனால்,தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது வீட்டிலிருந்தே பணி புரிந்து வருகின்றனர். எனினும்,தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால்,குறைந்த பட்ச ஊழியர்களுடன் நிறுவனங்கள் செயல்பட தொடங்கியுள்ளன.
இந்நிலையில்,செப்டம்பர் முதல் ஊழியர்களை படிப்படியாக மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய அனுமதிக்க வாய்ப்புள்ளது என்று விப்ரோவின் தலைமை மனிதவள அலுவலர் (ஹெச்.ஆர்) சவுரப் கோவில் தெரிவித்துள்ளார்.
ஜூலை 14 ம் தேதி நிறுவனத்தின் 75 வது ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது அதன் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி கூறுகையில்,”இந்தியாவில் 55 சதவீத ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது”, என்று கூறினார். இருப்பினும், அவை முதல் அல்லது இரண்டாவது டோஸ் அளவு தடுப்பூசியா? என்பதை அவர் குறிப்பிடவில்லை.
இதற்கிடையில்,டி.சி.எஸ் நிறுவனத்தின் கடந்த வார நிலவரப்படி, அதன் ஊழியர்களில் 70% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, செப்டம்பர் மாதத்திற்குள் அதன் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வார்கள் என்று தெரிவித்தது.
ஆனால்,இன்ஃபோசிஸ் ஊழியர்களில் 59% பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து,இன்போசிஸின் தலைமை இயக்க அதிகாரி பிரவீன் ராவ்,பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறுகையில்: “1,20,000 ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்காக மொத்தமுள்ள 2,30,000 டோஸ் தடுப்பூசிகளில் குறிப்பிட்ட அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது.இதனால் 59% பேர் குறைந்தது முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.மேலும்,ஊழியர்களில் 10% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் செலுத்தியுள்ளனர்”,என்று தெரிவித்துள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தில் தற்போது சுமார் 2 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.