ஒரு மாதத்தில் 20 லட்சம் இந்தியர்களின் கணக்கை தடை செய்த வாட்ஸ்அப்..!
மே 15 முதல் ஜூன் 15 வரை 20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்கை தடை செய்துள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது முதல் மாத இணக்க அறிக்கையில் இந்த தகவலை வழங்கியது. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் இந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ், ஒவ்வொரு மாதமும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்ட டிஜிட்டல் தளங்கள் இணக்க அறிக்கைகளை வெளியிட வேண்டும்.
இந்த அறிக்கையில், புகார்கள் மற்றும் அவை மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட வேண்டியது அவசியம். இந்நிலையில், இன்று வாட்ஸ்அப் கூறுகையில், மே 15 முதல் ஜூன் 15 வரை 20 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்கை தடை செய்துள்ளதாக தனது அறிக்கையில் கூறியுள்ளது. செய்தி அனுப்புதல், எதிர்மறை கருத்து உள்ளிட்டவை அடிப்படையில் வாட்ஸ்அப் கணக்கு தடைசெய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
அதே நேரத்தில் 345 புகார்கள் வந்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் உலகளவில் சராசரியாக 8 மில்லியன் கணக்குகளை வாட்ஸ்அப் தடை அல்லது செயலிழக்கச் செய்கிறது. கூகிள், ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பிற சமூக ஊடக தளங்களும் தங்களது இணக்க அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.