அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பிறகு பார்க்கலாம் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தமிழ்நாட்டை பிரித்து கொங்குநாடு என்ற தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்.
தமிழ்நாட்டிலுள்ள மேற்கு மாவட்டங்களான கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைப் பிரித்து ‘கொங்கு நாடு’ எனத் தனியாக ஒரு மாநிலத்தை உருவாக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக செய்திகள் வெளியானதால் சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாகச் சர்ச்சை எழுந்துள்ளது.
கடந்த ஜூன் 8-ம் தேதி நடந்த மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கான அறிமுக விவரக் குறிப்பில் ‘கொங்கு நாடு’ என்று இடம்பெற்றதிலிருந்துதான் இந்தச் சர்ச்சை உருவானது என கூறப்படுகிறது. அப்படி ஒரு கோரிக்கையை வைக்கவில்லை என பாஜகவும் தெரிவித்த பிறகும், கொங்குநாடு சர்ச்சை அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, தருமபுரியில் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பாஜக மாநில செயலாளர் கார்த்திகாயினி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் முதலாவதாக மேற்கு மாவட்டங்களை ஒருங்கிணைத்து கொங்குநாடு தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொங்குநாடு குறித்த பாஜகவினருடைய இந்தப் பேச்சுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கடும் கண்டனத்தையும் கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கொங்குநாடு குறித்த கேள்விக்கு, அத்தைக்கு மீசை முளைக்கட்டும் பிறகு பார்த்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்கமாட்டோம் என்றும் இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு எனவும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.