மதுரை மீனாட்சி அம்மனுக்கு..!! நாளை பட்டாபிஷேகம்..!!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனும், சுவாமியும் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்கள்.
நேற்று சுந்தரேசுவரர் தங்க ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் 4 மாசி வீதிகளில் வலம் வந்தனர். அப்போது திரளான பக்தர்கள் மத்தியில் கோவில் ஓதுவார்கள் சைவ சமய வரலாற்றை பாடினர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதற்காக தங்கப் பல்லக்கில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளி கீழசித்திரை வீதி, தெற்குஆவணி மூலவீதி, திண்டுக்கல் ரோடு வழியாக வலம் வருகிறார்கள்.
அம்மன் சன்னதி ஆறுகால் பீடத்தில் இரவு 7.40 மணிக்கு மேல் 8.04 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் மரகத மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூட்டப்படுகிறது. அப்போது அம்மனுக்கு ரத்தினங்களால் இழைக்கப்பட்ட ராயர் கிரீடம் சாற்றி, ரத்தினங்களால் இழைத்த செங்கோல் வழங்கி சிறப்பு ஆராதனைகளுடன் பட்டாபிஷேகம் நடத்தப்படுகிறது.
இரவு 9 மணிக்கு மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக கோலத்தில் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, மதுரையின் அரசியாக மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்