2 வெவ்வேறு தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் ஆபத்து வரலாம்-உலக சுகாதார நிறுவனம்..!
இரண்டு வெவ்வேறு விதமான தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு சில நாடுகளில் இரண்டு வெவ்வேறு விதமான தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்தியதால் நல்ல பலன் கிடைத்திருப்பதால், இப்படி செலுத்துவது குறித்த எண்ணம் உருவாகியுள்ளது.
தற்போது உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளதாவது, கொரோனா தடுப்பூசியின் இரண்டு தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது என்பது முறையானதல்ல. இதற்கு உலக சுகாதார நிறுவனம் ஒரு முடிவுக்கு வரவில்லை.
இதற்கான சோதனை உரிய தரவுகளுடன் கிடைத்த பின்னரே இதுபோன்று 2 தடுப்பூசிகளை பயன்படுத்துவது குறித்து சிந்திக்கப்படும் என்றும், தற்போதுள்ள சூழ்நிலையில் 2 தடுப்பூசிகளை பயன்படுத்த சிபாரிசு செய்வது ஆபத்தானது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளதாவது,
கொரோனாவுக்கு 3 ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்த தகுந்த ஆய்வு முடிவுகள் இல்லாத நிலையில், தடுப்பூசி மிச்சம் வைத்துள்ள பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு கொடுத்துதவ முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தடுப்பூசி நிறுவனங்கள் ஐ.நாவின் கோவேக்ஸ் திட்டத்துக்கு தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.