“தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது” – எம்.பி கனிமொழி ..!
தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து எம்.பி கனிமொழி மரியாதை செலுத்தினார் .அப்போது அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “
தமிழக மண் மற்றும் மண்ணின் பெருமைகளை பாதுகாப்பதற்காக தன் இன்னுயிரைத் தந்த சுதந்திர போராட்ட வீரர்களின் பெருமைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தொடர்ந்து காப்பாற்றப்படும்.
தமிழ் மண்ணின் பெருமைகளை எந்தவொரு காலகட்டத்திலும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விட்டுக் கொடுக்காது. நம்முடைய பெருமை மற்றும் உரிமைகளுக்காக திமுக ஆட்சி தொடர்ந்து போராடும்.
தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது.எனவே,அதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது.தமிழகம் பாதுகாப்பான ஆட்சியின்கீழ் தற்போது உள்ளது.”,என்றார்.
இதனைத் தொடர்ந்து,மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பது பற்றி செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு அவர் ,”அரசியலமைப்பு சட்டத்தில் ஒன்றிய அரசு என்று தான் உள்ளது.எனவே,அவ்வாறு அழைப்பதில் தவறு ஏதும் இல்லை.நாட்டுக்கு எதிரான ஒன்றும் இல்லை”,என்று தெரிவித்தார்.