தமிழக அரசுக்கு எச்சரிக்கை: அதிமுக மாவட்டக் செயலாளர்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

Default Image

அதிமுகவின் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றம்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள் என்னென்ன என்பதை தெரிவித்துள்ளனர்.

முதல் தீர்மானம்: தமிழ் நாட்டின் இதயத் துடிப்பான காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழ் நாட்டிற்கான உரிமையைக் காப்பீர். மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டப்படுவதைத் தடுப்பீர், தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.

இரண்டாவது தீர்மானம்: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் படும் துயரங்களை மனதிற்கொள்க மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை.

மூன்றாவது தீர்மானம்: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளைக் குறைக்க மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும். ஆட்சிக்கு வந்தவுடன் இவற்றின் விலைகளைக் குறைப்பதாக கொடுத்த வாக்குறுதியை மாநில ஆட்சியாளர்கள் நிறைவேற்ற வேண்டும்.

நான்காவது தீர்மானம்: சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றுவது பற்றி வாய் திறக்காத திமுக அரசுக்குக் கண்டனம். வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தல்.

ஐந்தாவது தீர்மானம்: தமிழ் நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழ் நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், தமிழ் நாட்டு மக்களின் பேராதரவோடு, தாய்மார்களின் பங்கேற்போடு மாபெரும் போராட்டத்தை நடத்துவோம், தமிழ் நாடு அரசுக்கு எச்சரிக்கை.

குறிப்பாக, 

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும், முதியோர் உதவித் தொகை ரூ.1,000 லிருந்து ரூ.1,500 உயர்த்தப்படும், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், கல்லூரிகளில் பட்டப் படிப்பை மேற்கொள்ள வங்கிக் கடன் பெற்ற 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் கல்விக் கடன்களை அரசே ஏற்று திருப்பி செலுத்தப்படும் என்றும்,

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 பவுனுக்குட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக அரசு அளித்த வாக்குறுதிகள் விரைந்து செயல்படுத்தப்படும் என்று தமிழ் நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு உள்ளனர். தமிழ் நாட்டு குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000/- ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக அரசு உடனே செயல்படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

ஆறாவது தீர்மானம்: விவசாயிகள், தாங்கள் விளைவித்த நெல்லை குறித்த நேரத்தில் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி விரயம் ஏற்படுவதற்குக் காரணமான தமிழக அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, உடனடியாகக் கொள்முதல் செய்ய வலியுறுத்தல் ஆகிய 6 தீர்மானங்கள் நிறைபெற்றப்பட்டுள்ளது. மேலும், அஇஅதிமுகவின் 50ஆம் ஆண்டு பொன்விழாவை சிறப்பாக கொண்டாடுதல் என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்