#BREAKING: கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு 15ஆக உயர்வு!!
கேரளாவில் கர்ப்பிணி ஒருவருக்கு ஜிகா பாதிப்பு உறுதியான நிலையில், தற்போது மேலும் 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கேரளாவில் புதிதாக 10 பேருக்கு ஜிகா என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்திருந்தது. கொரோனாவுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கும் இந்த வைரஸ் தொற்று அறிகுறிகளற்று இருப்பதாக கூறப்படுகிறது. கேரளாவிலிருந்து 13 பேரின் மாதிரிகள் புனேவில் இருக்கும் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து 10 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பட்ட 13 மாதிரிகளின் மீதும் சந்தேகம் இருப்பதாகவும் பாதிப்புகள் அனைத்தும் திருவனந்தபுரத்தை சேர்ந்தது எனவும் தெரிவித்திருந்தார். ஜிகா வைரஸ் என்பது கொசுவால் பரவக்கூடிய ஃபிளவி வைரஸ். இது முதன் முதலில் உகாண்டாவில் உள்ள குரங்குகளுக்கு 1947 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பு நிறுவனம் கூறியுள்ளது.
ஜிகா வைரஸ் அறிகுறிகள் அற்று இருந்தாலும், இது சிலருக்கு காய்ச்சல், தலைவலி, அரிப்பு, வெண்படலம், தசை மற்றும் மூட்டுவலிகளை ஏற்படும் என்றும் இவை அனைத்தும் பொதுவாக 2 முதல் 7 நாட்கள் அறிகுறிகள் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கேரளாவில் கர்ப்பிணி ஒருவருக்கு ஜிகா பாதிப்பு உறுதியான நிலையில், தற்போது மேலும் 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் பாடசாலை பகுதியில் கர்ப்பிணி ஒருவருக்கு நேற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மேலும் 14 பேருக்கு ஜிகா பாதிப்பு உறுதியானதால், மொத்தம் பாதிப்பு 15 ஆக உயர்ந்துள்ளது. திருவனந்தபுரத்தில் புதிதாக கண்டறியப்பட்ட 15 பேரில் பெரும்பாலானவர்கள் சுகாதார ஊழியர்கள் என கூறப்படுகிறது. ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட 15 பேரும் திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜிகா வைரஸ் 3 முதல் 14 நாட்கள்வரை உடலில் இருக்கும். இதுவரை ஜிகா வைரசுக்கு எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.