60 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் தப்பிய பெண் – ஆச்சரியத்தில் மருத்துவர்கள்!
இங்கிலாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் 60 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் தப்பியுள்ளது மருத்துவர்களுக்கே ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு இங்கிலாந்திலுள்ள கார்ன்வால் எனும் மாவட்டத்தை சேர்ந்த ரெபேக்கா கிராஃபோர்ட் எனும் பெண் ஒருவர் ஒரு குறுகிய பாதை கொண்ட மலையில் ஏறியதாக கூறப்படுகிறது. அப்பொழுது அவர் கால் திடீரென இடறியதால் அவர் 60 அடி உயரத்தில் இருந்து பாறைகள் மீது விழுந்துள்ளார். ஆனால் இந்த பெண்மணி அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் இருந்து உயிர் பிழைத்துள்ளார். அதன் பின்பு ஹெலிகாப்டர் மூலமாக காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்த பெண் உயிர் பிழைத்து இருந்தாலும், அவரது முதுகில் 6 எலும்புகள் முறிவு அடைந்துள்ளதுடன், முகத்தில் தையல்களும் போடப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த பெண் 60 அடி உயரத்தில் இருந்து உயிர் பிழைத்துள்ளது மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், திடீரென தனது கால் இடறியதால் தான் கீழே விழுந்ததாகவும், பிடிப்பதற்கு கூட அருகில் எதுவும் இல்லாததால் விழ வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், தான் விழுந்த பின்பு தனக்கு தலையில் பலத்த அடிபட்டதாகவும் இருப்பினும் நான் ஒரு பாறைமீது விழுந்த பின் எனக்கு என்ன நடந்தது என்பது எனக்கே தெரியவில்லை. ஆனால் தற்பொழுது நான் உயிரோடு இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.