ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான தமிழக வீராங்கனை ரேவதி – தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து..!
ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான தமிழக தடகள வீராங்கனை ரேவதிக்கு தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் வரும் 31ம் தேதி முதல் தடகள போட்டிகள் தொடங்கவுள்ளது.இந்த தடகள பிரிவில் 26 இந்திய வீரர் – வீராங்கனைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் பிரிவில் 17 பேர், மகளிர் பிரிவில் 9 பேர் பங்கேற்கவுள்ளனர்.
இதில் தமிழ்நாட்டில் இருந்து மேலும் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 3 வீராங்கனைகள், 2 வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். அதன்படி, 4*400 மீட்டர் தொடர் ஒட்டப்பிரிவில் ரேவதி பங்கேற்கவுள்ளார். இவர்,கடந்த 4 ஆம் தேதி நடந்த தகுதிச்சுற்றில் 400 மீட்டர் போட்டியின் இலக்கை 53.55 விநாடிகளில் கடந்து சாதனை புரிந்ததை அடுத்து, ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானார்.
இந்நிலையில்,தடகள வீராங்கனை ரேவதி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று தமிழகத்திற்கும்,இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும்,இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“தமிழகம்,மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி அவர்கள் ஒலிம்பிக் போட்டியில் இந்திய தடகள அணியில் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்காக கலந்துகொள்ள உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
தடகள வீராங்கனை ரேவதி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று தமிழகத்திற்கும்,இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பல சாதனைகளை படைத்து நம் இந்திய மண்ணிற்கு பெருமை சேர்க்கவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
தமிழகம்,மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி அவர்கள் ஒலிம்பிக் போட்டியில் இந்திய தடகள அணியில் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவிற்காக கலந்துகொள்ள உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.(1/2) pic.twitter.com/lmYpbGxMkd
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) July 6, 2021
முன்னதாகவே,தடகளம், வாள்சண்டை, டேபிள் டென்னிஸ், பாய்மரப்படகு போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 11 வீரர் – வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.