மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் மின்சார வாரியம் வைப்பு தொகை வசூலிப்பதை நிறுத்த வேண்டும் – ஜி.கே.வாசன்!
மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து மின்சார வாரியம் வைப்புத் தொகை வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் வருமானம் இழந்து தவித்து வரும் நிலையில், மின்சார வாரியம் அவர்களிடமிருந்து வைப்பு தொகை வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா பரவலை குறைக்கும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது தான் சிறிது சிறிதாக இயல்பு நிலை திரும்பி வருவதாகவும், ஊரடங்கால் சரியான வருமானம் இல்லாமல் மக்கள் தவித்து வரக்கூடிய இந்த வேளையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் மின்சார நுகர்வோரிடம் வைப்பு தொகை வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த சிரமமான நேரத்தில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு வைப்புத் தொகை செலுத்துவது மிகவும் சிரமமானது எனவும் கூறியுள்ளார்.
மேலும், ஊரடங்கால் அனைவரும் வீட்டில் அதிகம் இருந்ததால் மின் பயன்பாடு அதிகமாக இருக்கும். எனவே தற்போது கணக்கீடு செய்தால் வைப்பு தொகை அதிகமாக வரும். மக்கள் மாதாந்திர மின் கட்டணம் செலுத்தவே சிரமப்படும் நேரத்தில், வைப்புத்தொகை செலுத்த சொல்வது எந்த விதத்தில் நியாயம் எனவும், இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்களின் பொருளாதார சுமையை கருத்தில் கொண்டும், தொழில் நிறுவனங்களின் சிரமமான சூழ்நிலையினை உணர்ந்தும், கூடுதல் வைப்பு தொகை வசூலிப்பதை தமிழக அரசு, தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் உடனடியாக ரத்து செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தமிழக மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டு கொள்வதாக கூறியுள்ளார்.