சென்னையில் 22 ஆவின் பால் நிலையங்களுக்கு சீல் வைப்பு;ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு 1.5 டன் இலவச ஸ்வீட் …!

Default Image

சென்னையில் பழைய விலைக்கு ஆவின் பால்விற்ற  22 ஆவின் பால் நிலையங்களுக்கு சீல் வைத்துள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றுக் கொண்ட பின்,தமிழகம் முழுவதும் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார்.பின்னர்,அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி தமிழகம் முழுவதிலும் ஆவின் பால் விலை குறைக்கப்பட்டு பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,சித்தனூரில் அமைந்துள்ள சேலம் ஆவின் பால் பண்ணையில்,இன்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது:

” கடந்த ஆட்சியில் ஆவின் ஊழியர்களுக்கான பணி நியமனத்தில் 234 பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு பணி நீக்கம் செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் முதுநிலை மற்றும் இளநிலை ஆலை பணியாளர்களில்  நியமனத்தில்,அதிகாரிகள் முறைகேடாக பணம் பெற்றுள்ளதாக வந்த தகவலை அடுத்து,அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டு,அதற்கான புதிய பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில்,சென்னையில் 22 ஆவின் பால் நிலையங்கள் பழைய விலைக்கே பால் விற்பனை செய்ததால் அந்த நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.மேலும்,தமிழகம் முழுவதும் 25 பால் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது.

கடந்த ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டிற்கு,தீபாவளி நேரத்தில் 1.5 டன் ஸ்வீட் ஆவின் நிலையத்தில் இருந்து இலவசமாக அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரம் உள்ளது.நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்