செய்தியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் ..!

Default Image

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு வரும் 6-ஆம் சென்னை கலைவாணர் அரங்கில் தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து வரும் 6-ஆம் சென்னை கலைவாணர் அரங்கில் தடுப்பூசி சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை, வெயில், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள், காட்சி-ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்ற செய்தியாளர்கள் அனைவரையும் தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்து உள்ளார்கள். மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக விளங்கும் பத்திரிகையாளர்களின் நலளைக் கருதி, இவர்களது பணியினை உற்சாகப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகையினை ரூ.3,000/-லிருந்து ரூ.5,000/-ஆக உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், நாளது வரையில் தமிழகம் முழுவதும் 5,048 பத்திரிகையாளர்களுக்கு தலா ரூ.5,000/- ஊக்கத் தொகை வழங்கப்பட்டு உள்ளது.

அதேபோன்று, கொரோனா தொற்றின் காரணமாக பத்திரிகையாளர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது வாரிசுதாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டு வந்த ரூபாய் 5 லட்சத்தை ரூபாய் 10 லட்சமாக உயர்த்தி வழங்கிடவும் முதலமைச்சர் அவரகள் உத்தரவிட்டார்கள்.  மேலும், பத்திரிகைத்துறை மற்றும் அனைத்து ஊடகத் துறையினர்களும் நோய்த் தொற்றுக் காலத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் தங்கள் பணியினை மேற்கொள்ள ஏதுவாக, செய்தித்துறை, மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து எதிர்வரும் 6.7.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமானது காலை 10.00 மணிக்குத் தொடங்கி மாலை 4.00 மணி வரை நடைபெறும்.

மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையேற்கும் இந்நிகழ்வில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

முற்றிலும் பத்திரிகையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் சிறப்பு முகாமினை அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினரும் பயன்படுத்திக் கொண்டு கொரோனா நோய்த் தொற்று தடுப்பூசியினை தவறாமல் செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்