“சமூகநீதியைப் படுகொலை செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பு” – திருமாவளவன்..!

Default Image

பிற்படுத்தப்பட்ட சாதிகளைக் கண்டறியும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சமூகநீதியை பாதுகாக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பாதுகாத்திட சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“மராத்தா வகுப்பினருக்கு மகாராஷ்டிர மாநில அரசு 16 சதவீத இட ஒதுக்கீடு அளித்ததை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பிற்படுத்தப்பட்ட சாதிகளைக் கண்டறியவோ, பட்டியல்படுத்தவோ, பட்டியலை மாற்றியமைக்கவோ மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தது.

மத்திய அரசு அரசியலமைப்புச் சட்டத்தில் புதிதாக பிரிவுகள் 338B, 342 Aஆகியவற்றைச் சேர்த்து 102வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியதற்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட சாதிகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கும், குடியரசு தலைவருக்கும் மட்டுமே உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

இதை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் அதையும் நேற்று தள்ளுபடி செய்துள்ளனர். இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியலில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்வதற்கு இனிமேல் மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது.

அது மட்டுமின்றி, ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டுக்கு மேல் செல்லக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் இதன் மூலம் உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது.

சமூக நீதிக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரான இந்தத் தீர்ப்பை தமிழ்நாடு அரசு ஏற்கக் கூடாது. மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும், சமூகநீதியைப் படுகொலை செய்யும் இந்தத் தீர்ப்பை மாற்றும் விதமாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான அரசு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்