பேருந்து நிலையத்தில் வெளியேறும் கழிவு நீரால் மக்கள் அவதி..,

துறையூர்: திருச்சி மாவட்டம் ஊரின் மையப் பகுதியில் துறையூர் பஸ்நிலையம்  அமைந்துள்ளது.தனியாருக்கு சொந்தமான ஓட்டல்கள் மற்றும் தனியார் கடைகள் பஸ்நிலையத்தில்  அதிக அளவில் உள்ளன. அதேபோல் நகராட்சிக்கு சொந்தமான கடைகளும் உள்ளது. தனியார் ஓட்டல்களில் இருந்து மீதம் ஆகும் உணவு பொருட்கள் மற்றும் சாம்பார் உள்பட அனைத்து கழிவுபொருட்கள், நகராட்சிக்கு சொந்தமான கட்டண கழிவறை ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவு, கழிவுநீர் ஆகியவை பஸ்நிலையத்தில் உள்ள இரு கழிவுநீர் வாய்க்கால்கள் வழியாகவே வெளியேற்றப்படுகிறது.இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

தினந்தோறும் கழிவுநீர் வாய்க்காலை நகராட்சி அலுவலர்கள்  தூர் வாருவது கிடையாது. மாதத்திற்கு 1 முறை மட்டும் கழிவு நீர் வாய்க்கால்களை தூர்வாருகின்றனர்.மேலும் அதில் அடைத்துள்ள கழிவுகளை பஸ் நிலையத்திலேயே கொட்டி விடுகிறார்கள். கழிவு பொருட்கள் திறந்த வெளியில் கொட்டுவது மட்டுமல்லாமல் 1 வாரத்திற்கும் மேலாக கழிவுகள் வெயிலில் காய்ந்த பிறகு நகராட்சி ஊழியர்கள் அதை நீக்குகிறார்கள்.  அதுவரை திறந்த வெளியில் இருப்பதால் அதில் இருந்து காலரா, பேதி போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாய நிலையில் ஏற்படுகிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment