சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து வழக்கு…!
சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி வழக்கு.
கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் போட்டியிட்டார். உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து பாமக வேட்பாளர் கசாலி போட்டியிட்டார்.
இதனையடுத்து, உதயநிதி ஸ்டாலின் பாமக வேட்பாளர்களை விட 69 ஆயிரத்து 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், அத்தொகுதியின் தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி அவர்கள், உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் தன் மீதான குற்ற வழக்குகள் குறித்து தவறான தகவல்களை அளித்துள்ளார். அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும், தொகுதியின் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்று அறிவிக்குமாறும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து, உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பான விசாரணை, ஓரிரு வாரங்களில் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.