#Breaking : பள்ளி குழந்தைகளை பாலியல் வன்முறையிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Default Image

பள்ளி குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக்கல்வி வாரியங்களைச் சார்ந்த(Education Boards) அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்நெறிமுறைகள் பொருந்தும்.மாணவர் பாதுகாப்பைத் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யவும், அது சார்ந்த நடவடிக்கைகள் குறித்து மதிப்பீடு செய்யவும், ஒவ்வொரு பள்ளியிலும், “மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு” அமைக்கப்படும்.

இக்குழுவில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர் இருவர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் இருவர், பள்ளி நிருவாக உறுப்பினர் ஒருவர், ஆசிரியரல்லாத பணியாளர் ஒருவர் மற்றும் தேவைக்கேற்பப் பள்ளி சாரா வெளிநபர் ஒருவர் என உறுப்பினர்களாக இருப்பர். ஒருமாத காலத்தில் மாநில அளவில் ஒரு கட்டுப்பாட்டு அறையைப் பள்ளிக்கல்வித்துறை உருவாக்கும். அனைத்துத் தரப்பினரும் தங்களது குறைகளை எளிதாகத் தெரிவிக்கும் வகையில் இம்மையத்தில் கட்டணமில்லா நேரடி தொலைபேசி (Hot Line) மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் வசதி உருவாக்கப்படும்.

மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு தங்களுக்கு வரப்பெற்ற எந்த வகையான புகாரையும் உடனடியாக மாநிலக் கட்டுப்பாட்டு அறைக்குத் (Central Complaint Centre-CCC) தெரியப்படுத்தவேண்டும்.

இந்த மையம் புகார்களைப் பதிவு செய்வது மட்டுமின்றி, அதுசார்ந்து பின்பற்ற வேண்டிய அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு வழங்கும். இம்மையத்தில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பல்துறை வல்லுநர் இருப்பர். இம்மையத்தின் தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் மந்தணத்தன்மையுடன் பாதுகாக்கப்படும்.

பள்ளிகளைச் சார்ந்த அனைத்து அங்கத்தினருக்கும் போக்சோ (POCSO) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த முழு புரிதல் உண்டாகும் வகையில் வருடந்தோறும் பயிற்சிகள் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான விழிப்புணர்வு கட்டகம் (orientation module) பள்ளிக் கல்வித்துறையால் உருவாக்கி வழங்கப்படும்.

பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும், சுயத் தணிக்கை (Self-audit) செய்வதை உறுதி செய்யவும் பள்ளிக்கல்வித்துறையால் கட்டகம் (Module) உருவாக்கப்பட்டு வழங்கப்படும்.

இணையவழிக் கற்றல்-கற்பித்தல் நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் வகுப்பறைச் சூழலுக்கேற்றவாறு கண்ணியமாக  உடை அணியவேண்டும் மற்றும் இணையவழிக் கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்வதோடு, அப்பதிவுகளைக் குறிப்பிட்ட இடைவெளியில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவைச் சேர்ந்தவர்கள் தொடர் ஆய்வு செய்யவேண்டும்.

புகார் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை எளிதே தெரிவிப்பதற்காகப் பள்ளிவளாகத்தில் பாதுகாப்புப் பெட்டிகள் (Safety Boxes) வைக்கப்படும். மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை ஆய்வுசெய்து தக்க நடவடிக்கை எடுக்கும்.

மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு, பள்ளியில் பெறப்பட்ட அனைத்துப் புகார்களையும் பதிவு செய்யத் தனியாக ஒரு பதிவேட்டைப் பராமரிக்கும். புகாரானது எந்த முறையில் பெறப்பட்டிருந்தாலும் (வாய்மொழி உட்பட) இந்தப் பதிவேட்டில் பதியப்பட வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15 முதல் நவம்பர் 22 வரை ‘குழந்தைகள் துன்புறுத்தலைத் தடுக்கும் வாரம்’ என விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்